Monday, November 16, 2015

எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில்...அவர் வாசித்த அன்பு மகுடிக்கு , எத்தனையோ விஷப் பாம்புகள்

எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில்...அவர் வாசித்த அன்பு மகுடிக்கு , எத்தனையோ விஷப் பாம்புகள் கூட வசமாகி , 
அவர் வாசல் தேடி வந்து வந்து , வாழ்த்தி விட்டுப் போய் இருக்கின்றன...! 

இதில் பெரிதாக ஆச்சரியப்பட ஏதும் இல்லை..!
ஆனால்... எம்.ஜி.ஆர். என்ற மாமனிதரையே விழுங்க கூடிய அசுர பலம் கொண்ட அனகோண்டாவின் சக்தி கொண்டவர் கருணாநிதி..!

சற்றுமுன்.. கருணாநிதியின் ஒரு பழைய பேட்டியைப் படித்தபோது நான் அசந்து போனேன்...
இதோ..கருணாநிதியின் வார்த்தைகள் :

“நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார்.
என்னை அவரது அறைக்குத் தனிமையிலே அழைத்துச் சென்று , சட்டமன்றத்திற்குள் திறக்கப்படவிருந்த பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்குக் கீழே என்ன வார்த்தைகளை எழுதலாம் என்பதைக் பற்றி என்னை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார்.
நானும் மகிழ்ச்சியுடன், “உழைப்பே உயர்வு தரும்!” என்று எழுதிக் கொடுத்தேன்.
ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அப்போது நடந்துகொண்ட முறையை நினைக்கும் போது மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்?” 


கருணாநிதியின் இந்த ஆனந்தத்தைக் காணும்போது , ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது...!

எம்.ஜி.ஆரின் அன்பு மகுடி , 
ஆனானப்பட்ட அனகோண்டா பாம்பைக் கூட 
அசத்தி இருக்கிறது...!


பிரிந்து செல்லும் உறவுகள் பெரும்பாலும் நம்மை அவமானப்படுத்தி விட்டுத்தான் பிரிந்து செல்கிறது...!

பிரிந்து செல்லும் உறவுகள்
பெரும்பாலும் நம்மை
அவமானப்படுத்தி விட்டுத்தான் பிரிந்து செல்கிறது...!
ஆனால் கார்டூனிஸ்ட் மதன் , விகடனிலிருந்து பிரிந்து போனது , ஒரு மலர் செடியிலிருந்து உதிர்ந்தது போல மிகவும் மென்மையாக நிகழ்ந்தது...
அந்த பிரிவு ஏற்படக் காரணம்...
“ஹாய் மதன்” பகுதியில் வாசகர் ஒருவர் கேட்ட இந்தக் கேள்வி...
“உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?”
இதற்கு மதன் சாதாரணமாகவே பதில் எழுதி இருந்தார்...ஆனால் விகடன் ஆசிரியர் குழு , இந்தப் பதிலின் பக்கத்தில் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழும் படத்தை போட...
மதனுக்கு சிக்கல் ஆரமபமானது...
பதறிப் போன மதன் விகடனுக்கு எழுதினார் இப்படி...
“2.5.2012 இதழில் ‘காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா?
…வரும் இதழிலேயே ‘புகைப்படங்கள், லே – அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
– மதன்”
மதனின் இந்த வேண்டுகோளுக்கு , சற்றும் எதிர்பாராத பதிலை விகடன் வெளியிட்டது :
“மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும் , நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், ‘ஹாய் மதன்’ பகுதியை மட்டும் அல்ல… கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது..
எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி – பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
– ஆசிரியர்
# அவ்வளவுதான்...முடிந்து போனது விகடன் – மதன் உறவுத் தொடர்கதை ...!
ஆனாலும் மதனுக்கும் , விகடனுக்கும் இத்தனை காலம் இருந்து வந்தது , உண்மையான உறவுதான் என்று உறுதியாகக் கூறலாம்...!
ஏனென்றால் இருவரும் இந்தப் பிரிவு நேரிட்ட பின்....
ஒருவரை ஒருவர் புறம் கூறவும் இல்லை..புழுதி வாரித் தூற்றவும் இல்லை...!
“ கருத்து மோதலில் உறவுகள் உடைந்த பின்னரும் ...
ஒருவர் மற்றவரைப் பற்றி அடுத்தவரிடம் புறம் பேசாமல் இருந்தால்
அதுவே உண்மையான உறவு...!!!”
[ ப.பி. ]      John Durai Asir Chelliah

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்....!”

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்....!”
கண்ணதாசன் பாடல்களை எப்போதுமே விரும்பி ரசிக்கும் எனக்கு , அவர் “மகாதேவி” படத்தில் எழுதிய இந்த ஒரு வசனம் மட்டும் ...
கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு , நெருடலாகவே இருந்தது ...
“மகாதேவி” படத்தில் வில்லன் நடிகர் வீரப்பாவுக்காக ,
கண்ணதாசன் எழுதிய புகழ் பெற்ற வசனம் அது...
# கவிஞன் வாக்கு பொய்க்காது என்பார்கள்...
கண்ணதாசன் ஏன் அப்படி ஒரு எதிர்மறை வசனத்தை எழுதினார் என்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை...!!!
# அது இருக்கட்டும்...
சற்று முன் நான் படித்த ஒரு நண்பரின் பதிவு :
“மிதமிஞ்சிய நேர்மையாளனாக இருந்தால் ,
பஞ்சாயத்து உறுப்பினராகக் கூட முடியாது என்பதற்கு
அய்யா நல்லக்கண்ணு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.”
# ஆம்...நிஜம்தானே..!
இந்தப் பதிவை எழுதிய நண்பர் , அத்தோடு விடவில்லை...
கண்ணதாசனின் “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்....!”என்ற வரியையும் அத்தோடு சேர்த்தே பதிவு செய்திருக்கிறார்...
# என்ன செய்வது..?
நல்லகண்ணு போன்ற நல்ல தலைவர்கள் , நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்...
ஆனால் , நமக்குத்தான் அவர்களை ஏனோ பிடிப்பதில்லை...!!!
# அது தெரிந்துதான் கண்ணதாசன் இப்படி எழுதினாரோ , என்னவோ..?

John Durai Asir Chelliah

Saturday, October 31, 2015

“ ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் , பல இருக்கும்..ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு , அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன?”


“ ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் , பல இருக்கும்..ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு , அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன?”

# இது இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் ஒரு முறை கேட்கப்பட்ட கேள்வி...
இதற்கு பாலச்சந்தர் என்ன பதில் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம்...
அதற்கான முழு உரிமையும் , தகுதியும் அவருக்கு இருக்கிறது...

ஆனால்...பாலச்சந்தர் சொன்ன பதில் என்ன தெரியுமா..?

" நூற்றுக்கு நூறு'' படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லட்சுமி கறுப்புப் புள்ளி என்பார். நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன்.
அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன்.

அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.
அதைத்தான் நான் பார்க்கிறேன்.”

# பாலச்சந்தரின் உள்ளத்தின் உயர்வு , இந்த உன்னத வார்த்தைகளில் வெளிப்படுகிறது...!

“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.”

# உலகத்தில் மிகவும் எளிமையானது ...
மற்றவர்களின் குறைகளைக் காண்பது …

உலகிலேயே மிக மிகக் கடினமானது ...
தன் குறையை , தானே அறிவது...!!


John Durai Asir Chelliah

Friday, October 23, 2015

“எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்...அது தருகிற தன்னம்பிக்கையை வேறு எதுவும் தராது .....!!”


“எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்...அது தருகிற தன்னம்பிக்கையை வேறு எதுவும் தராது .....!!”

இன்று இதைப் படித்தபோது எனக்கு ஏனோ நடிகர் ஜெய்சங்கரின் புன்னகை நினைவுக்கு வந்தது ...

சிவாஜி – எம்.ஜி.ஆர். என்ற இரு இமயங்கள் ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்த காலத்தில் , ஜெய்சங்கருக்கென்றும் தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது... அதற்கான தகுதி அவருக்கு இருந்தது...தன்னம்பிக்கையும் கூடவே இருந்தது...

நடைமுறை வாழ்க்கையிலேயே நாம் பார்த்திருக்கிறோமே....!
மௌன்ட் ரோட்டில்...”புஹாரி ஹோட்ட”லுக்கு கொஞ்சம் தள்ளி , சின்னதாய் தள்ளுவண்டி வைத்துக் கொண்டு ஒருவர் சிக்கன் பிரியாணி விற்றுக் கொண்டிருப்பார்.... அவரிடம் சாப்பிடவும் ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கும்.....
தி.நகரில் , போத்திஸ் , சரவணா ஸ்டோர்ஸ் பக்கத்திலேயே , தரையில் கடை பரப்பி சட்டைகளும் , சுடிதார்களும் விற்றுக் கொண்டிருப்பார்கள்...அவர்களிடம் பேரம் பேசி வாங்கவும் பெரும்பாலோர் வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள்..

அது போலவே திரை உலகத்திலும் , பிரகாசமான நட்சத்திரங்களுக்கு இடையில்.. தன்னம்பிக்கை உள்ளவர்கள் தனி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டுதான் இருந்தார்கள் ..இருக்கிறார்கள்...!
அப்படி அந்த நாட்களில் ஜொலித்த ஒரு நட்சத்திரம்தான் ஜெய்சங்கர்...

அந்த ஜெய்சங்கரின் ரசிகர்களில் ஒருவராக ஆனது பற்றி .. இதோ... எழுத்தாளர் பாலகுமாரன் வரிகளில்....

“ மிகமிக கற்பனையான எம்.ஜி.ஆர். படங்கள். "அடித்து நொறுக்கிவிடலாம். உடல் வலிமைதான் முக்கியம். நல்லவனாகவும் இருக்கவேண்டும். அடித்து நொறுக்குபவனாகவும் இருக்க வேண்டும்' என்று சொல்லித்தரப்பட்ட பாடம் அபத்தமாய் இருந்தது.
சண்டை எளிதே இல்லை. அது வலி மிகுந்தது. அவமானம் மிக்கது. தெருவில் சண்டையிட்டு அடித்து ஜெயித்தாலும், "தெருவில் அடித்த அயோக்கியன்' என்றுதான் வருமே தவிர, ஜெயித்தது வராது.
எம்.ஜி.ஆரை மட்டும் கொண்டாடுகிறார்களே, அது எப்படி? அது சினிமா. எம்.ஜி.ஆரைக் கொண்டாடுவார்கள். ஆனால் நீ சண்டையிட்டால் அசிங்கப்படுத்துவார்கள். பொறுக்கி என்பார்கள். இதை வெகு எளிதில் கற்றுக் கொண்டேன்.
அந்தக்கால படங்களில் சிவாஜி உதடு பிதுக்கி நிறைய அழுவார். அப்படி அழவும் அவமானமாக இருந்தது. அழும்போது பின்னால் வயலின்கள் ஒலிக்கவேண்டும். கிட்டார் அழ வேண்டும். புல்லாங்குழல் இசைக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த அழுகை மற்றவருக்குள் பெரிய துக்கமாகப் படரும். இந்த இசையில்லாத அழுகை ஒரு எழவும் செய்யாது. அதுவும் புரிந்தது. நான் சினிமாவிலிருந்து வெகுவேகமாக விலகினேன். சினிமா சொல்லித் தராது என்று நம்பினேன்.
இவர்கள் இரண்டு பேருக்கு பதில் ஜெய்சங்கர் படங்கள் அர்த்தமுள்ளதாய் எனக்குப் பட்டன. அவருடைய உயரமும் பேன்ட், உள்ளே சொருகப்பட்ட சட்டை, தலைமுடி, ஒரு குறுகிய நடை, கோணலாய் நிற்கின்ற போஸ். இதுதான் பல இளைஞர்களைக் கவர்ந்தது. ரவிச்சந்திரன் என்ற நடிகர் வேறுவிதமான தலை அலங்காரம், வேறுவிதமான மீசையோடு வர, அவர் பின்னாலும் கூட்டம் திரண்டது.”
இப்படி எழுதியிருக்கிறார் பாலகுமாரன் ...ஆம்..அதுதான் உண்மை...!

# தகுதி உள்ளவர்களைக் காட்டிலும் , தன்னம்பிக்கை உள்ளவர்களே எளிதில் வெற்றி பெறுகிறார்கள்..!

ஜெய்சங்கரின் நடை, உடை, புன்னகை எல்லாவற்றிலுமே தன்னம்பிக்கை தனித்துவமாக தெரியும்...!
அதுதான் அவர் பெற்ற வெற்றிக்கு மிகப் பெரும் காரணம்..!

“மச்சம்யா அந்த மனுஷனுக்கு...!”


“மச்சம்யா அந்த மனுஷனுக்கு...!”

எம்.ஜி.ஆர். பற்றி என் நண்பர்களோடு பேசும்போது “நச்”சென்று ஒரே வாக்கியத்தில் இப்படி கமெண்ட் அடிப்பார்கள்...
ஆம்..மற்றவர்கள் பொறாமைப்படும்படி வாழ்ந்த போற்றத்தக்க மனிதர் ..எம்.ஜி.ஆர்..!

சினிமாவில் இருந்தவரை சிகரம் தொட்ட சிம்மாசனம்...!
அரசியலில் நுழைந்தால் , அரசாளும் அரியாசனம் .!
இப்படி வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்...!

ஆம்... வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவரது வெற்றி முகம் மட்டும்தான் தெரியும்...ஆனால் அவருக்குள் இருந்த வேதனை மனம்....அதை யார் அறிவார்..?
தன் வாழ்க்கை பற்றி ஒரே வரியில் எம்.ஜி.ஆர். சொன்ன இந்த வாசகம் , நம் இதயத்தை உலுக்குகிறது...!

எம்.ஜி.ஆர். சொன்னது :
”என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை போராட்டமாகவே இருக்கிறது!”

இதை அவரது சாதாரண சங்கட காலங்களில் சொல்லி இருந்தால் பரவாயில்லை..
ஆனால் , புகழின் உச்சிக்குப் போனபின்... ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது இப்படிச் சொன்னாராம் எம்.ஜி.ஆர்...

உண்மைதானே..!
எம்.ஜி.ஆர். போல வாழ ஆசைப்படும் என் இனிய நண்பர்களிடம் நான் இப்படிக் கேட்பேன்..
“ஏழாவது வயதிலேயே வயிற்றுப்பிழைப்புக்காக நாடகக் கம்பெனியில் சேர்ந்து.... பசியிலும் பட்டினியிலும் சோர்ந்து ..ஒரு நடிகராக உருவெடுப்பதற்குள் அவர் சந்தித்த அவமானங்கள்...அதை நம்மில் எத்தனை பேர் பட்டிருப்போம்...அல்லது படத் தயாராக இருப்போம்..?”

எனது இந்தக் கேள்விக்கு பல நண்பர்களின் பதில் ...மௌனமே..!

அது மட்டுமா..?
1959 இல் நாடகத்தில் நடித்தபோது கால் முறிவு... 1967 இல் துப்பாக்கிசூடு...1972 இல் தான் வளர்த்த சொந்தக் கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்ட அவலம்...

அட... இது எல்லாவற்றையும் விடுங்கள்...ஒரு சாதாரண சராசரி மனிதனாக அவரது இதயத்து அடித்தள ஏக்கம்... அது ஈடில்லாத பெரும் துக்கம்...!

இதோ..அந்த சோகம் ..அவரது சொந்த வார்த்தைகளில் ...
“எனக்கு ரெண்டு, மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கலியே ! எந்த ஒரு புண்ணியவதியாவது என் வாரிசை அவ வயித்திலே பத்து மாசம் சுமந்து பெத்து என் கையிலே குழந்தையா கொடுக்க மாட்டாளா ? அப்படிங்கற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது...”

# நெஞ்சை நெகிழ வைக்கிறது அந்த நினைத்ததை முடிப்பவனின் நிறைவேறாத ஆசை...!

நான் நண்பர்களிடம் சொல்வேன்... “இவ்வளவு சோதனைகள் , ஏக்கங்கள் , அவமானங்கள் ..எல்லாவற்றையும் படத் தயாராக இருந்தால் ...எம்.ஜி.ஆர். ஆக ஆசைப்படலாம்.....எல்லோருமே...!!!”

# இதற்கு என் நண்பர்களின் பதில் ......ஏக்கப் பெருமூச்சு மட்டுமே...!!!

ஆம்... நாம் ஏக்கத்துடன் பார்க்கும் பல பெரிய மனிதர்களின் வாழ்க்கை .....
ஏக்கங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது..!

John Durai Asir Chelliah

இதுவும் கடந்து போகும் ... !

இதுவும் கடந்து போகும் ... ! 

இன்பம் - துன்பம் இரண்டும் இங்கே நிரந்தரம் இல்லை..!!

..... ரஜினியிடம் கே.பாலச்சந்தர் ஒருமுறை இப்படிக் கேட்டார்...

“அபூர்வ ராகங்கள்” ஷூட்டிங்கில் நீ என்னுடன் பங்கேற்றது உனக்கு நினைவிருக்கிறதா?”

இதற்கு ரஜினியின் பதில் :
“அபூர்வராகங்கள் படத்திற்காக, நான் ஒரு காட்சியில் நடித்தேன்... நானும் , ஸ்ரீவித்யாவும் பங்கு கொள்ளும் லவ் சீன்.... இரண்டு பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் பிடித்துக் கொண்டு , சிரித்துக்கொண்டும் , பேசிக்கொண்டும் வரவேண்டும். அக்காட்சியில் வசனம் கிடையாது. வெறும் உதட்டசைப்பு மட்டும்தான்... இதனால், `உங்கள் இஷ்டப்படி ஏதாவது பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் நடந்து வாருங்கள்’ என்று சொன்னார்கள். நான் கன்னடத்தில் பேச, ஸ்ரீவித்யா மலையாளத்தில் பேசினார்.. இந்தக் காட்சி முடிந்தது. `நீங்க வீட்டுக்குப்போகலாம்' என்றார்கள்...நான் `மேக்கப்'பை கலைத்து விட்டு சந்தோஷமாக வெளியே வந்தேன்...அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பு அத்துடன் முடிவடைந்தது...”

அடுத்து பாலச்சந்தர் இப்படிக் கேட்டார் :
“ஏவி.எம். ஸ்டூடியோவில் ‘அவர்கள்’ படப்பிடிப்பின்போது நான் உன்னைத் திட்டியதும் உனக்கு நினைவிருக்கிறதா?”

சற்றும் தயங்காமல் ரஜினி பதில் சொன்னார்:
“ நன்றாக நினைவு இருக்கிறது.... “உனக்கு நடிப்பு வராது... உன்னால் நான் தலையைப் பிச்சுக்கணும்... இன்ஸ்டிட்யூட்ல நீ என்ன படிச்சி கிழிச்சியோ! ‘மூன்று முடிச்சு’படத்துல வசனம் கம்மி.... சிகரெட்டை தூக்கிப் போடறது, அதைப் போடறதுன்னு ஸ்டைலா போயிருச்சு... ஆனா இது வசனம் நிறைய இருக்கிற கேரக்டர். ...‘இவனுக்காக நான் கேரக்டரை மாத்த முடியாது. இவனை மாத்திட்டு ஜெய்கணேசை கொண்டு வாங்க’ன்னு சொல்லி ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு நீங்க போனது, இன்னைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது...”

# ரஜினி சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போன பாலச்சந்தர் சற்று முகம் மாறித்தான் போனார்...
ஆனால்...இரண்டு நிகழ்வுகளை சொல்லும்போதும் ரஜினியிடம் எந்த மாற்றமும் இல்லை...

“அபூர்வ ராகங்கள்” தந்த இன்ப நாட்களையோ...”அவர்கள்” தந்த துன்ப நாட்களையோ ..இரண்டையுமே ரஜினி ஒரே மாதிரியாகவே எடுத்துக் கொள்கிறார்...

# ஆம்... இது ரஜினிக்கு ஆன்மிகம் கற்றுக் கொடுத்த பாடம்...!

“துன்பம் யாருக்கும்
சொந்தமில்லை..
இன்பம் யாருக்கும்
நிரந்தரமில்லை..”


John Durai Asir Chelliah