Monday, November 16, 2015

எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில்...அவர் வாசித்த அன்பு மகுடிக்கு , எத்தனையோ விஷப் பாம்புகள்

எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில்...அவர் வாசித்த அன்பு மகுடிக்கு , எத்தனையோ விஷப் பாம்புகள் கூட வசமாகி , 
அவர் வாசல் தேடி வந்து வந்து , வாழ்த்தி விட்டுப் போய் இருக்கின்றன...! 

இதில் பெரிதாக ஆச்சரியப்பட ஏதும் இல்லை..!
ஆனால்... எம்.ஜி.ஆர். என்ற மாமனிதரையே விழுங்க கூடிய அசுர பலம் கொண்ட அனகோண்டாவின் சக்தி கொண்டவர் கருணாநிதி..!

சற்றுமுன்.. கருணாநிதியின் ஒரு பழைய பேட்டியைப் படித்தபோது நான் அசந்து போனேன்...
இதோ..கருணாநிதியின் வார்த்தைகள் :

“நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார்.
என்னை அவரது அறைக்குத் தனிமையிலே அழைத்துச் சென்று , சட்டமன்றத்திற்குள் திறக்கப்படவிருந்த பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்குக் கீழே என்ன வார்த்தைகளை எழுதலாம் என்பதைக் பற்றி என்னை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார்.
நானும் மகிழ்ச்சியுடன், “உழைப்பே உயர்வு தரும்!” என்று எழுதிக் கொடுத்தேன்.
ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அப்போது நடந்துகொண்ட முறையை நினைக்கும் போது மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்?” 


கருணாநிதியின் இந்த ஆனந்தத்தைக் காணும்போது , ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது...!

எம்.ஜி.ஆரின் அன்பு மகுடி , 
ஆனானப்பட்ட அனகோண்டா பாம்பைக் கூட 
அசத்தி இருக்கிறது...!


பிரிந்து செல்லும் உறவுகள் பெரும்பாலும் நம்மை அவமானப்படுத்தி விட்டுத்தான் பிரிந்து செல்கிறது...!

பிரிந்து செல்லும் உறவுகள்
பெரும்பாலும் நம்மை
அவமானப்படுத்தி விட்டுத்தான் பிரிந்து செல்கிறது...!
ஆனால் கார்டூனிஸ்ட் மதன் , விகடனிலிருந்து பிரிந்து போனது , ஒரு மலர் செடியிலிருந்து உதிர்ந்தது போல மிகவும் மென்மையாக நிகழ்ந்தது...
அந்த பிரிவு ஏற்படக் காரணம்...
“ஹாய் மதன்” பகுதியில் வாசகர் ஒருவர் கேட்ட இந்தக் கேள்வி...
“உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?”
இதற்கு மதன் சாதாரணமாகவே பதில் எழுதி இருந்தார்...ஆனால் விகடன் ஆசிரியர் குழு , இந்தப் பதிலின் பக்கத்தில் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழும் படத்தை போட...
மதனுக்கு சிக்கல் ஆரமபமானது...
பதறிப் போன மதன் விகடனுக்கு எழுதினார் இப்படி...
“2.5.2012 இதழில் ‘காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா?
…வரும் இதழிலேயே ‘புகைப்படங்கள், லே – அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
– மதன்”
மதனின் இந்த வேண்டுகோளுக்கு , சற்றும் எதிர்பாராத பதிலை விகடன் வெளியிட்டது :
“மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும் , நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், ‘ஹாய் மதன்’ பகுதியை மட்டும் அல்ல… கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது..
எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி – பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
– ஆசிரியர்
# அவ்வளவுதான்...முடிந்து போனது விகடன் – மதன் உறவுத் தொடர்கதை ...!
ஆனாலும் மதனுக்கும் , விகடனுக்கும் இத்தனை காலம் இருந்து வந்தது , உண்மையான உறவுதான் என்று உறுதியாகக் கூறலாம்...!
ஏனென்றால் இருவரும் இந்தப் பிரிவு நேரிட்ட பின்....
ஒருவரை ஒருவர் புறம் கூறவும் இல்லை..புழுதி வாரித் தூற்றவும் இல்லை...!
“ கருத்து மோதலில் உறவுகள் உடைந்த பின்னரும் ...
ஒருவர் மற்றவரைப் பற்றி அடுத்தவரிடம் புறம் பேசாமல் இருந்தால்
அதுவே உண்மையான உறவு...!!!”
[ ப.பி. ]      John Durai Asir Chelliah

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்....!”

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்....!”
கண்ணதாசன் பாடல்களை எப்போதுமே விரும்பி ரசிக்கும் எனக்கு , அவர் “மகாதேவி” படத்தில் எழுதிய இந்த ஒரு வசனம் மட்டும் ...
கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு , நெருடலாகவே இருந்தது ...
“மகாதேவி” படத்தில் வில்லன் நடிகர் வீரப்பாவுக்காக ,
கண்ணதாசன் எழுதிய புகழ் பெற்ற வசனம் அது...
# கவிஞன் வாக்கு பொய்க்காது என்பார்கள்...
கண்ணதாசன் ஏன் அப்படி ஒரு எதிர்மறை வசனத்தை எழுதினார் என்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை...!!!
# அது இருக்கட்டும்...
சற்று முன் நான் படித்த ஒரு நண்பரின் பதிவு :
“மிதமிஞ்சிய நேர்மையாளனாக இருந்தால் ,
பஞ்சாயத்து உறுப்பினராகக் கூட முடியாது என்பதற்கு
அய்யா நல்லக்கண்ணு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.”
# ஆம்...நிஜம்தானே..!
இந்தப் பதிவை எழுதிய நண்பர் , அத்தோடு விடவில்லை...
கண்ணதாசனின் “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்....!”என்ற வரியையும் அத்தோடு சேர்த்தே பதிவு செய்திருக்கிறார்...
# என்ன செய்வது..?
நல்லகண்ணு போன்ற நல்ல தலைவர்கள் , நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்...
ஆனால் , நமக்குத்தான் அவர்களை ஏனோ பிடிப்பதில்லை...!!!
# அது தெரிந்துதான் கண்ணதாசன் இப்படி எழுதினாரோ , என்னவோ..?

John Durai Asir Chelliah