Saturday, October 31, 2015

“ ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் , பல இருக்கும்..ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு , அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன?”


“ ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் , பல இருக்கும்..ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு , அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன?”

# இது இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் ஒரு முறை கேட்கப்பட்ட கேள்வி...
இதற்கு பாலச்சந்தர் என்ன பதில் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம்...
அதற்கான முழு உரிமையும் , தகுதியும் அவருக்கு இருக்கிறது...

ஆனால்...பாலச்சந்தர் சொன்ன பதில் என்ன தெரியுமா..?

" நூற்றுக்கு நூறு'' படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லட்சுமி கறுப்புப் புள்ளி என்பார். நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன்.
அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன்.

அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.
அதைத்தான் நான் பார்க்கிறேன்.”

# பாலச்சந்தரின் உள்ளத்தின் உயர்வு , இந்த உன்னத வார்த்தைகளில் வெளிப்படுகிறது...!

“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.”

# உலகத்தில் மிகவும் எளிமையானது ...
மற்றவர்களின் குறைகளைக் காண்பது …

உலகிலேயே மிக மிகக் கடினமானது ...
தன் குறையை , தானே அறிவது...!!


John Durai Asir Chelliah

Friday, October 23, 2015

“எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்...அது தருகிற தன்னம்பிக்கையை வேறு எதுவும் தராது .....!!”


“எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்...அது தருகிற தன்னம்பிக்கையை வேறு எதுவும் தராது .....!!”

இன்று இதைப் படித்தபோது எனக்கு ஏனோ நடிகர் ஜெய்சங்கரின் புன்னகை நினைவுக்கு வந்தது ...

சிவாஜி – எம்.ஜி.ஆர். என்ற இரு இமயங்கள் ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்த காலத்தில் , ஜெய்சங்கருக்கென்றும் தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது... அதற்கான தகுதி அவருக்கு இருந்தது...தன்னம்பிக்கையும் கூடவே இருந்தது...

நடைமுறை வாழ்க்கையிலேயே நாம் பார்த்திருக்கிறோமே....!
மௌன்ட் ரோட்டில்...”புஹாரி ஹோட்ட”லுக்கு கொஞ்சம் தள்ளி , சின்னதாய் தள்ளுவண்டி வைத்துக் கொண்டு ஒருவர் சிக்கன் பிரியாணி விற்றுக் கொண்டிருப்பார்.... அவரிடம் சாப்பிடவும் ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கும்.....
தி.நகரில் , போத்திஸ் , சரவணா ஸ்டோர்ஸ் பக்கத்திலேயே , தரையில் கடை பரப்பி சட்டைகளும் , சுடிதார்களும் விற்றுக் கொண்டிருப்பார்கள்...அவர்களிடம் பேரம் பேசி வாங்கவும் பெரும்பாலோர் வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள்..

அது போலவே திரை உலகத்திலும் , பிரகாசமான நட்சத்திரங்களுக்கு இடையில்.. தன்னம்பிக்கை உள்ளவர்கள் தனி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டுதான் இருந்தார்கள் ..இருக்கிறார்கள்...!
அப்படி அந்த நாட்களில் ஜொலித்த ஒரு நட்சத்திரம்தான் ஜெய்சங்கர்...

அந்த ஜெய்சங்கரின் ரசிகர்களில் ஒருவராக ஆனது பற்றி .. இதோ... எழுத்தாளர் பாலகுமாரன் வரிகளில்....

“ மிகமிக கற்பனையான எம்.ஜி.ஆர். படங்கள். "அடித்து நொறுக்கிவிடலாம். உடல் வலிமைதான் முக்கியம். நல்லவனாகவும் இருக்கவேண்டும். அடித்து நொறுக்குபவனாகவும் இருக்க வேண்டும்' என்று சொல்லித்தரப்பட்ட பாடம் அபத்தமாய் இருந்தது.
சண்டை எளிதே இல்லை. அது வலி மிகுந்தது. அவமானம் மிக்கது. தெருவில் சண்டையிட்டு அடித்து ஜெயித்தாலும், "தெருவில் அடித்த அயோக்கியன்' என்றுதான் வருமே தவிர, ஜெயித்தது வராது.
எம்.ஜி.ஆரை மட்டும் கொண்டாடுகிறார்களே, அது எப்படி? அது சினிமா. எம்.ஜி.ஆரைக் கொண்டாடுவார்கள். ஆனால் நீ சண்டையிட்டால் அசிங்கப்படுத்துவார்கள். பொறுக்கி என்பார்கள். இதை வெகு எளிதில் கற்றுக் கொண்டேன்.
அந்தக்கால படங்களில் சிவாஜி உதடு பிதுக்கி நிறைய அழுவார். அப்படி அழவும் அவமானமாக இருந்தது. அழும்போது பின்னால் வயலின்கள் ஒலிக்கவேண்டும். கிட்டார் அழ வேண்டும். புல்லாங்குழல் இசைக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த அழுகை மற்றவருக்குள் பெரிய துக்கமாகப் படரும். இந்த இசையில்லாத அழுகை ஒரு எழவும் செய்யாது. அதுவும் புரிந்தது. நான் சினிமாவிலிருந்து வெகுவேகமாக விலகினேன். சினிமா சொல்லித் தராது என்று நம்பினேன்.
இவர்கள் இரண்டு பேருக்கு பதில் ஜெய்சங்கர் படங்கள் அர்த்தமுள்ளதாய் எனக்குப் பட்டன. அவருடைய உயரமும் பேன்ட், உள்ளே சொருகப்பட்ட சட்டை, தலைமுடி, ஒரு குறுகிய நடை, கோணலாய் நிற்கின்ற போஸ். இதுதான் பல இளைஞர்களைக் கவர்ந்தது. ரவிச்சந்திரன் என்ற நடிகர் வேறுவிதமான தலை அலங்காரம், வேறுவிதமான மீசையோடு வர, அவர் பின்னாலும் கூட்டம் திரண்டது.”
இப்படி எழுதியிருக்கிறார் பாலகுமாரன் ...ஆம்..அதுதான் உண்மை...!

# தகுதி உள்ளவர்களைக் காட்டிலும் , தன்னம்பிக்கை உள்ளவர்களே எளிதில் வெற்றி பெறுகிறார்கள்..!

ஜெய்சங்கரின் நடை, உடை, புன்னகை எல்லாவற்றிலுமே தன்னம்பிக்கை தனித்துவமாக தெரியும்...!
அதுதான் அவர் பெற்ற வெற்றிக்கு மிகப் பெரும் காரணம்..!

“மச்சம்யா அந்த மனுஷனுக்கு...!”


“மச்சம்யா அந்த மனுஷனுக்கு...!”

எம்.ஜி.ஆர். பற்றி என் நண்பர்களோடு பேசும்போது “நச்”சென்று ஒரே வாக்கியத்தில் இப்படி கமெண்ட் அடிப்பார்கள்...
ஆம்..மற்றவர்கள் பொறாமைப்படும்படி வாழ்ந்த போற்றத்தக்க மனிதர் ..எம்.ஜி.ஆர்..!

சினிமாவில் இருந்தவரை சிகரம் தொட்ட சிம்மாசனம்...!
அரசியலில் நுழைந்தால் , அரசாளும் அரியாசனம் .!
இப்படி வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்...!

ஆம்... வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவரது வெற்றி முகம் மட்டும்தான் தெரியும்...ஆனால் அவருக்குள் இருந்த வேதனை மனம்....அதை யார் அறிவார்..?
தன் வாழ்க்கை பற்றி ஒரே வரியில் எம்.ஜி.ஆர். சொன்ன இந்த வாசகம் , நம் இதயத்தை உலுக்குகிறது...!

எம்.ஜி.ஆர். சொன்னது :
”என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை போராட்டமாகவே இருக்கிறது!”

இதை அவரது சாதாரண சங்கட காலங்களில் சொல்லி இருந்தால் பரவாயில்லை..
ஆனால் , புகழின் உச்சிக்குப் போனபின்... ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது இப்படிச் சொன்னாராம் எம்.ஜி.ஆர்...

உண்மைதானே..!
எம்.ஜி.ஆர். போல வாழ ஆசைப்படும் என் இனிய நண்பர்களிடம் நான் இப்படிக் கேட்பேன்..
“ஏழாவது வயதிலேயே வயிற்றுப்பிழைப்புக்காக நாடகக் கம்பெனியில் சேர்ந்து.... பசியிலும் பட்டினியிலும் சோர்ந்து ..ஒரு நடிகராக உருவெடுப்பதற்குள் அவர் சந்தித்த அவமானங்கள்...அதை நம்மில் எத்தனை பேர் பட்டிருப்போம்...அல்லது படத் தயாராக இருப்போம்..?”

எனது இந்தக் கேள்விக்கு பல நண்பர்களின் பதில் ...மௌனமே..!

அது மட்டுமா..?
1959 இல் நாடகத்தில் நடித்தபோது கால் முறிவு... 1967 இல் துப்பாக்கிசூடு...1972 இல் தான் வளர்த்த சொந்தக் கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்ட அவலம்...

அட... இது எல்லாவற்றையும் விடுங்கள்...ஒரு சாதாரண சராசரி மனிதனாக அவரது இதயத்து அடித்தள ஏக்கம்... அது ஈடில்லாத பெரும் துக்கம்...!

இதோ..அந்த சோகம் ..அவரது சொந்த வார்த்தைகளில் ...
“எனக்கு ரெண்டு, மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கலியே ! எந்த ஒரு புண்ணியவதியாவது என் வாரிசை அவ வயித்திலே பத்து மாசம் சுமந்து பெத்து என் கையிலே குழந்தையா கொடுக்க மாட்டாளா ? அப்படிங்கற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது...”

# நெஞ்சை நெகிழ வைக்கிறது அந்த நினைத்ததை முடிப்பவனின் நிறைவேறாத ஆசை...!

நான் நண்பர்களிடம் சொல்வேன்... “இவ்வளவு சோதனைகள் , ஏக்கங்கள் , அவமானங்கள் ..எல்லாவற்றையும் படத் தயாராக இருந்தால் ...எம்.ஜி.ஆர். ஆக ஆசைப்படலாம்.....எல்லோருமே...!!!”

# இதற்கு என் நண்பர்களின் பதில் ......ஏக்கப் பெருமூச்சு மட்டுமே...!!!

ஆம்... நாம் ஏக்கத்துடன் பார்க்கும் பல பெரிய மனிதர்களின் வாழ்க்கை .....
ஏக்கங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது..!

John Durai Asir Chelliah

இதுவும் கடந்து போகும் ... !

இதுவும் கடந்து போகும் ... ! 

இன்பம் - துன்பம் இரண்டும் இங்கே நிரந்தரம் இல்லை..!!

..... ரஜினியிடம் கே.பாலச்சந்தர் ஒருமுறை இப்படிக் கேட்டார்...

“அபூர்வ ராகங்கள்” ஷூட்டிங்கில் நீ என்னுடன் பங்கேற்றது உனக்கு நினைவிருக்கிறதா?”

இதற்கு ரஜினியின் பதில் :
“அபூர்வராகங்கள் படத்திற்காக, நான் ஒரு காட்சியில் நடித்தேன்... நானும் , ஸ்ரீவித்யாவும் பங்கு கொள்ளும் லவ் சீன்.... இரண்டு பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் பிடித்துக் கொண்டு , சிரித்துக்கொண்டும் , பேசிக்கொண்டும் வரவேண்டும். அக்காட்சியில் வசனம் கிடையாது. வெறும் உதட்டசைப்பு மட்டும்தான்... இதனால், `உங்கள் இஷ்டப்படி ஏதாவது பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் நடந்து வாருங்கள்’ என்று சொன்னார்கள். நான் கன்னடத்தில் பேச, ஸ்ரீவித்யா மலையாளத்தில் பேசினார்.. இந்தக் காட்சி முடிந்தது. `நீங்க வீட்டுக்குப்போகலாம்' என்றார்கள்...நான் `மேக்கப்'பை கலைத்து விட்டு சந்தோஷமாக வெளியே வந்தேன்...அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பு அத்துடன் முடிவடைந்தது...”

அடுத்து பாலச்சந்தர் இப்படிக் கேட்டார் :
“ஏவி.எம். ஸ்டூடியோவில் ‘அவர்கள்’ படப்பிடிப்பின்போது நான் உன்னைத் திட்டியதும் உனக்கு நினைவிருக்கிறதா?”

சற்றும் தயங்காமல் ரஜினி பதில் சொன்னார்:
“ நன்றாக நினைவு இருக்கிறது.... “உனக்கு நடிப்பு வராது... உன்னால் நான் தலையைப் பிச்சுக்கணும்... இன்ஸ்டிட்யூட்ல நீ என்ன படிச்சி கிழிச்சியோ! ‘மூன்று முடிச்சு’படத்துல வசனம் கம்மி.... சிகரெட்டை தூக்கிப் போடறது, அதைப் போடறதுன்னு ஸ்டைலா போயிருச்சு... ஆனா இது வசனம் நிறைய இருக்கிற கேரக்டர். ...‘இவனுக்காக நான் கேரக்டரை மாத்த முடியாது. இவனை மாத்திட்டு ஜெய்கணேசை கொண்டு வாங்க’ன்னு சொல்லி ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு நீங்க போனது, இன்னைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது...”

# ரஜினி சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போன பாலச்சந்தர் சற்று முகம் மாறித்தான் போனார்...
ஆனால்...இரண்டு நிகழ்வுகளை சொல்லும்போதும் ரஜினியிடம் எந்த மாற்றமும் இல்லை...

“அபூர்வ ராகங்கள்” தந்த இன்ப நாட்களையோ...”அவர்கள்” தந்த துன்ப நாட்களையோ ..இரண்டையுமே ரஜினி ஒரே மாதிரியாகவே எடுத்துக் கொள்கிறார்...

# ஆம்... இது ரஜினிக்கு ஆன்மிகம் கற்றுக் கொடுத்த பாடம்...!

“துன்பம் யாருக்கும்
சொந்தமில்லை..
இன்பம் யாருக்கும்
நிரந்தரமில்லை..”


John Durai Asir Chelliah

நமது ஆழ்மனம் எதை நோக்கி அதிகம் சிந்திக்கிறதோ , அது நடந்தே தீரும் ...! ஆம்... அத்தனை ஆற்றல் கொண்டது நமது ஆழ்மனம் ....!


நமது ஆழ்மனம் எதை நோக்கி அதிகம் சிந்திக்கிறதோ , அது நடந்தே தீரும் ...!
ஆம்... அத்தனை ஆற்றல் கொண்டது நமது ஆழ்மனம் ....!

யாரோ சொன்னது... எங்கோ கேட்டது... எப்போதோ படித்தது.....
நமது இதயத்தின் அடித்தளத்தில் சென்று , ஆழ்மனதில் அப்படியே தங்கி விடுகிறது.....

தங்கி விட்ட அந்த விஷயம் , பிறகு எப்போதோ நாம் எதிர்பார்க்காத வேளையில் ,எங்கிருந்தோ புறப்பட்டு வந்து , நமது பேச்சுக்களாகவும் எழுத்துக்களாகவும் மீண்டும் பிறப்பெடுக்கிறது...

“பாட்ஷா” படத்தின் பவர்புல் வசனம் .. “ நான் ஒரு தடவ சொன்னா ... நூறு தடவ சொன்ன மாதிரி..”
இதை எழுதியவர் பாலகுமாரன்....ஆனால் 18ம் நூற்றாண்டிலேயே இதைப் போல ஒரு வசனம் எழுதப்பட்டு விட்டதாம்...

“ Sense and Sensibility ”.... “Pride and Prejudice” ....இதைப் போன்ற புகழ்மிக்க நாவல்களை எழுதிய ஆங்கிலப் பெண் நாவலாசிரியர் “ஜேன் ஆஸ்டின்” [Jane Austen ]...
இவர் 1815 ஆம் ஆண்டு எழுதி , வெளியிட்ட புகழ் பெற்ற நாவல் “எம்மா” ....இந்த நாவலில் இடம்பெற்ற வாசகம் ... “If I've told you once, I've told you a 100 times..."

இதை எப்போதோ பாலகுமாரன் படித்திருக்கலாம்...அது அவரது ஆழ்மனதில் தங்கி ...“பாட்ஷா” படத்திற்கு வசனம் எழுதும்போது வெளிப்பட்டிருக்கலாம்...
ஆனாலும் அந்த வார்த்தைகளுக்கு அத்தனை அழுத்தமான வலிமை கொடுத்தவர் .... ரஜினி....!

இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும்...!
“பாட்ஷா “வின் மூலம் ரஜினி எவ்வளவு அழுத்தமாக நம் ஆழ்மனதில் புகுந்தாரோ , அதே அளவு நம் ஆழ்மனதில் புகுந்து , இன்னும் நம் நினைவில் நிற்பவர் ரகுவரன்...

நான் ரசித்த நண்பரின் பதிவு...

# “கபாலி” மூலம் ரசிகர்களுக்கு இன்னொரு பாட்ஷா கிடைக்கலாம்...
ஆனால் இன்னொரு ஆண்டனி கிடைப்பாரா என்பது சந்தேகம்தான்..”

# உண்மைதான்...!!!

John Durai Asir Chelliah

"கும்பி எரியுது குடல் கருகுது ... குளு குளு ஊட்டி ஒரு கேடா?"


 "கும்பி எரியுது குடல் கருகுது ... குளு குளு ஊட்டி ஒரு கேடா?"

நெருப்பு பற்ற வைக்கும் வார்த்தைகளை தெரிந்தெடுத்து தன் பேச்சில் பயன்படுத்தும் வல்லமையும் , அறிவும் கருணாநிதி அளவுக்கு யாருக்கும் கை வந்தது இல்லை..!

# அது ஒரு கோடை காலம்... அப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது...!அப்போதைய சட்டசபை நிகழ்ச்சிகளை ஊட்டியில் நடத்தலாம் என்று காங்கிரஸ் கட்சி தீர்மானம் போட்டதாம்...
கொதித்து எழுந்தார் கருணாநிதி...

"கும்பி எரியுது குடல் கருகுது ... குளு குளு ஊட்டி ஒரு கேடா?" என்று பத்திரிகையில் கேள்வி எழுப்பினார்.
படித்தவர்கள் அத்தனை பேருக்கும் "குபீர்" என தீப்பற்றிக் கொண்டது..!
கருணாநிதியின் அறிவு , அத்தனை பேரையும் கவர்ந்தது... !
ஆதரவு அலை அவருக்கு அமோகமாக ஆனது..!

வசனம் எழுதுவதிலும் கருணாநிதியின் பேனா , வலிமை வாய்ந்தது....
பராசக்தியில் ஒவ்வொரு வசனமுமே “பஞ்ச்” வசனம்தான்...
“வந்தாரை வாழவைக்கும் தமிழகமே! நீ சொந்த நாட்டுக்காரனையே சுரண்டுவது எத்தனை நாளாய்?
வானத்தை முட்டும் மாளிகைகள் ! மானத்தை மறந்த மனிதர்கள்!
வீரப் பெண்களின் ஏடுகளை எழுதி எழுதி ஏற்றம் பெற்ற என்னருமைப் பொன்னாடே! நீ விபச்சாரிகளை வீதியில் திரியவிட்டு விழிகளை மூடிக்கொண்டது ஏன்?”

# பராசக்தி வசனத்தில் “பளிச்” என வெளிப்பட்ட கருணாநிதியின் அறிவு ,எல்லைகளைக் கடந்து எல்லோரையும் கவர்ந்தது...
எழுத்திலும் , பேச்சிலும் கருணாநிதியின் அறிவுக்கு ஈடாக , இதுவரை எவரையும் தமிழ்நாடு கண்டது இல்லை...
ஆனால்..இவரை எதிர்த்து நின்று போராடிய எம்.ஜி.ஆருக்கு எழுத்தறிவு ...பேச்சறிவு......இரண்டுமே சுமார்தான் ...!

# பார்த்தார் எம்.ஜி.ஆர்..! கருணாநிதிக்கு ஈடாக தன்னால் ஒருபோதும் பேசவோ , எழுதவோ இயலாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டார்...

அறிவு என்ற நெருப்பை ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு.... அன்பு என்ற ஐஸ் கட்டியை கையில் எடுத்தார் எம்.ஜி.ஆர்.... அப்புறமாக ஒரு பொதுக் கூட்டத்தில் , கூடியிருந்த மக்களைப் பார்த்து இப்படிச் சொன்னாராம் எம்.ஜி.ஆர்...!

“எனக்கு சொத்து எதுவும் வேண்டாம்.... நீங்க என்மேல இவ்வளவு பாசம் வைச்சிருக்கீங்க... உங்க ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒரு வேளை சாப்பிட்டால் கூட , என் ஆயுசு பூராவும் சாப்பிடலாம். நீங்கதான் எனக்கு எல்லாம்..”

# இவ்வளவுதான் எம்.ஜி.ஆர்.சொன்னது...!
அந்த அன்பு மழையில் , அத்தனை மக்களும் சொட்ட சொட்ட நனைந்து , சொக்கிப் போனார்கள்..!

# அறிவுக்கும் , அன்புக்கும் அடிப்படை வித்தியாசங்கள் உண்டு....

“அறிவு எதையும் யோசித்து செய்யும்....
அன்பு எதையும் யோசிக்காமல் செய்யும்..!!”

அதைப் புரிந்து கொண்டு , பொதுமக்களை தன் அன்பு வலைக்குள் , அகப்படச் செய்யும் வசியம் தெரிந்தவர் எம்.ஜி.ஆர். மட்டுமே..!

# மக்களை கொஞ்சம் கூட யோசிக்க விடாமல் , கடைசிவரை தன் சினிமாக்களை ரசிக்க வைத்தவர் ...எம்.ஜி.ஆர்...!
அது போலவே... அவர்களை கொஞ்சம் கூட யோசிக்க விடாமல் கடைசிவரை தனக்கு ஓட்டு போட வைத்தவரும் எம்.ஜி.ஆர்தான்..!

# அன்பு என்ற அந்த அற்புதமான ஆயுதத்தை நாமும் அனுதினமும் கையில் எடுத்து .. ஆயுத பூஜை நாளில் மட்டும் அல்ல...
அன்றாடம் பூஜிப்போம்...!
அன்பு ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!!


John Durai Asir Chelliah

தொகுப்பு-கணேசன் பாண்டிச்சேரி

Thursday, October 22, 2015

“எல்லோருக்கும் பதினைந்து நிமிஷப் புகழ் தேவையாக இருக்கிறது.”..


“எல்லோருக்கும் பதினைந்து நிமிஷப் புகழ் தேவையாக இருக்கிறது.”...

சுஜாதா பல ஆண்டுகளுக்கு முன் இப்படி எழுதி இருக்கிறார் :

"இப்போது புதிதாக BLOGS என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் மறுவடிவம்தான். 

'இதோ பார் என் கவிதை', 'இதோ பார் என் கருத்து', 'இதோ பார் உலகுக்கு என் உபதேசம்' என நானும் இருக்கிறேன் நண்டுவளையில் என்று, ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது!”

# சுஜாதா சொல்வது சரிதான் என்று தோன்றுகிறது... நம் எல்லோருக்குமே அந்த “பதினைந்து நிமிஷ புகழ் ”....
ஏதோ ஒரு பரவசம் கொடுக்கத்தான் செய்கிறது..!

நமக்கு மட்டும் அல்ல... நடிகை சுகன்யாவுக்கும் கூட அந்த “பதினைந்து நிமிஷ புகழ் ” பரவசம் தேவைப்பட்டிருக்கிறது...!
இந்தியன் படத்தின்போது அது அறிந்தோ அறியாமலோ அவரிடம் வெளிப்பட்டிருக்கிறது...
அது பற்றி சுஜாதா :

“இந்தியன் படம் வெளிவரும் முன் சென்சார் அதிகாரியாக இருந்த ஞானராஜசேகரன் என்னை அலுவலகத்துக்கு அழைத்தார். “நடிகை சுகன்யா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அவரை ‘டூப்’ வைத்து துகிலுரித்த மாதிரி காண்பித்ததாக யாரோ சொல்லியிருக்கிறார்கள். அந்தக் காட்சியை அனுமதிக்கக் கூடாது” என்று எழுதியிருப்பதாகச் சொன்னார்.
“அப்படி ஒரு காட்சியே இல்லையே... இல்லாத காட்சியை எப்படி வெட்டப் போகிறீர்கள் ?” என்று கேட்டேன். சுகன்யாவை இந்தியனில் கொஞ்சம்போலும் இளமையாகக் காட்டிவிட்டு பெரும்பாலும் கிழ கமல்ஹாசனுக்கு மாட்சிங்காக சுருக்கங்கள் விழுந்து காட்டியதில் அவருக்கு மிகுந்த அதிருப்தி இருந்தது. தெரியாத்தனமாய் ஷங்கர் படம் என்பதால் ஒப்புக்கொண்டுவிட்டார். ஷங்கரின் படத்துக்கு மறுப்புத் தெரிவித்தால் நிச்சயம் கவனிப்பார்கள்.
எல்லோருக்கும் பதினைந்து நிமிஷப் புகழ் தேவையாக இருக்கிறது.”

# உண்மை... சுஜாதா சொல்வதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்...
என்ன... சிலருக்கு பதினைந்து நிமிஷப் புகழ்....சிலருக்கு 30 நிமிஷம் ...சிலருக்கு ஒருமணி நேரம்...சிலருக்கு ஒரு சில நாட்கள்...
இதில் வேண்டுமானால் சிலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம்...!

# சரி...நீங்கள் எழுதிய கருத்துக்களில் , சில நாட்களுக்குப் பின் உங்களுக்கே கருத்து வேறுபாடு உண்டானால் ....???கவலைப்படாதீர்கள்..!

அதையும் சுஜாதா அனுபவித்துச் சொல்லி இருக்கிறார் ..இப்படி..!

“முன்னர் எழுதியதில் நமக்குக் கருத்து வேறுபாடு வந்தால், நாம் அனுபவம் பெற்று இருக்கிறோம் என்று அர்த்தம்...”

John Durai Asir Chelliah

அத்தனைக்கும் ஆசைப்படு” என்பது , அர்த்தம் உள்ள தத்துவம்தான்..!


அத்தனைக்கும் ஆசைப்படு” என்பது , அர்த்தம் உள்ள தத்துவம்தான்..!
ஆனால் ..அதை விட முக்கியமானது ...

“அவமானப்பட ஆசைப்படுங்கள்..”

ஆம்.... அவமானங்களை வெறுக்காதீர்கள்...!

“நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் அவமானங்கள்தான் , வாழ்ந்துகாட்டவேண்டும் என்ற வலிமையை நமக்குள் வளர்க்கின்றன..” - இது அன்பு நண்பர் ஒருவர் சொன்னது..அதில் அர்த்தம் உள்ளது..!

மாஸ்டர் சேகர்...மாஸ்டர் ஸ்ரீதர்... மாஸ்டர் பிரபாகர்.....
இவர்கள் எல்லோருமே அன்றைய ரசிகர்களின் மனம் கவர்ந்த குழந்தை நட்சத்திரங்கள்...
இந்த நட்சத்திரங்கள் எல்லோருமே வாலிபனாக வளரும்போதே , எம்.ஜி.ஆர். ஆக வேண்டும் , சிவாஜி ஆக வேண்டும் என எண்ணற்ற கனவுகளோடு... எல்லையில்லா ஆசைகளையும் தன்னோடு சேர்த்தே வளர்த்தார்கள்....

ஆனால் ஒரே ஒரு குழந்தை நட்சத்திர சிறுவன் மட்டும் வித்தியாசமான அனுபவங்களோடு , விதம் விதமான அவமானங்களையும் சந்தித்தான்..
நடனம் படித்தான்...நாட்டிய நிகழ்சிகள் நடத்தினான்...
எல்லாமாகச் சேர்ந்து ஏழாயிரம் ரூபாய் நஷ்டம்...

சினிமா உலகத்தை விட்டு போகப் போகிறேன் என்று சொன்னவனை , அவன் அருகில் இருந்தவர்கள் அணைத்து , ஆதரவு கொடுத்தார்கள்....
சின்ன சின்ன வாய்ப்புகளும் , பெரிய பெரிய அவமானங்களும் நிறையவே கிடைத்தன...

டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன் கொடுத்த ஆதரவால்..நடன உதவி இயக்குனர் வாய்ப்பு கிடைக்க .... ‘அன்னை வேளாங்கண்ணி’ (1971) படத்தின் டைட்டிலில் உதவி இயக்குனர் என , திரை உலகின் ஒரு ஓரத்தில் ஒண்டிக் கொள்ள , கொஞ்சம் இடம் கிடைத்தது....

1972 இல் வந்த “குறத்தி மகன்” படத்தில் ஒரு ஓரமாக நின்று கொண்டு... அந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மாஸ்டர் ஸ்ரீதரைப் பார்த்து "ராஜா வாழ்க" என்று கோஷம் போடும் கேரக்டர்...

ஜெமினி கணேசன் டைரக்டர் ஸ்ரீதரிடம் கூட்டிக்கொண்டு போக... அந்தப் பையனைப் பார்த்துவிட்டு ஸ்ரீதர் சொன்ன கமெண்ட் .. “ இந்தப் பையனுக்கு ஃபோட்டோஜெனிக் ஃபேஸ் கிடையாது ..”

விடவில்லை ஜெமினி... “இவன் துடிப்பான பிள்ளை. உங்க படத்திலே நடிச்சா நல்லா ‘ஷேப்’ ஆயிருவான்,” என்று டைரக்டர் பாலசந்தரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
அரங்கேற்றம் (1973) படத்தில் நிறைய காட்சிகளில் நடித்த அந்த இளைஞனுக்கு அதற்காக கிடைத்தது 300 ரூபாய் மட்டுமே ....!

அரங்கேற்றத்தை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டான்...திறமையை வளர்த்துக் கொண்டான்...திரை உலக விஷயங்களை கரைத்துக் குடித்தான்....பெரிய நடிகன் ஆனா...ர்....!

ஆம்... விஸ்வரூபம் எடுத்த அந்த குழந்தை நட்சத்திரம் ..... கமல்...!

இந்த இடத்தை அடைவதற்குள் கமல் பட்ட அவமானங்கள்.....

அன்று சினிமாவை விட்டு போகப் போகிறேன் என்று நடுக்கத்துடன் சொன்ன அந்த நடிகர் , இப்போது மிரட்டலாகச் சொன்னார்.... “கலைஞன் என்ற முறையில் மீண்டும் எனக்கு மிரட்டல், பிரச்னை ஏற்பட்டால், நாட்டை விட்டு வெளியேறுவேன்..”

# அன்பான அறிவுரைகளை விட அவமானங்கள்தான் , வெற்றியை நோக்கி விரைவாக நம்மை இழுத்துச் செல்லும்....

ஆதலினால்...... அவமானப்பட ஆசைப்படுங்கள்...!

“உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல... தப்பித்தவறிக் கூட அதே தவறை நாம் இன்னொருவருக்கு செய்து விடக்கூடாது.”
[ ப.பி.]
John Durai Asir Chelliah

“ஆங்கிலயேன் ஒருவன் தமிழை , தட்டுத் தடுமாறிப் பேசினால் அதை ரசிக்கிறார்கள்...

“ஆங்கிலயேன் ஒருவன் தமிழை , தட்டுத் தடுமாறிப் பேசினால் அதை ரசிக்கிறார்கள்...
ஆனால் தமிழன் ஒருவன் ஆங்கிலத்தை அரைகுறையாய் பேசினால் , கேலியாய் சிரிக்கிறார்கள்...”
[ப.பி.]

# இந்த நேரத்தில் சின்னப்ப தேவர் ஞாபகம் வருகிறது ... அவரின் “பட்லர்” இங்கிலிஷ் பட உலகில் ரொம்ப பிரபலம்...!

“ஈஸியா இங்கிலீஷ் பேசணும் முருகா....என்ன வழி..?” என்று ஆங்கிலம் தெரிந்த நண்பர்களிடம் ஆலோசனை கேட்டாராம் தேவர்...
அதற்கு அவருக்கு கிடைத்த அட்வைஸ் :
“மத்தவங்க தமிழில் பேசினாலும் , நீங்க பதிலுக்கு இங்கிலிஷிலேயே பேசுங்க... ஈஸியா பழகிடலாம்...”

ஒருநாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகை சரோஜாதேவி , தேவர் அருகில் வந்து , தயங்கி தயங்கி நின்றாராம்..
“என்னம்மா..?” என்று கேட்ட தேவரிடம் “அண்ணே! நாளைக்கு எனக்கு கொஞ்சம் வீட்டு வேலைகள் இருக்கு... ஷூட்டிங் வர முடியாது... நான் இல்லாம அட்ஜஸ்ட் பண்ணி எடுத்துக்கறீங்களா..?”

தமிழில் பதில் சொல்ல வாய் திறந்த தேவருக்கு , நண்பர்கள் சொன்னது நினைவுக்கு வந்ததாம்....
ஸ்டைலாக தேவர் , சரோஜாதேவியைப் பார்த்து சொன்னாராம் ...இப்படி...

“ஓகே ஓகே... டுமாரோ ஐ வில் மேரேஜ் யூ...”

அதிர்ந்து போனாராம் சரோஜாதேவி ... “அண்ணே...” என்று அவர் அலற...அருகிலிருந்தவர்கள் எடுத்துச் சொன்ன பின்தான் , சமாதானமாகிப் போனாராம் சரோஜாதேவி...

“மேனேஜ்” செய்து கொள்கிறேன் என்பதைத்தான் “மேரேஜ்” செய்து கொள்வதாக சொல்லி , எல்லோரையும் அதிர வைத்து விட்டார் தேவர்...

# ஓகே..ஓகே...!
இங்கிலிஷில் பேச எல்லோருக்கும் ஆசை இருப்பது தப்பில்லை..!

ஆனால்...

“ஆங்கிலம் பேசும்போது
அதில் தமிழ் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நாம்...
தமிழ் பேசும்போது ஏன் அதே கவனத்தை மனதில் கொள்வதில்லை.?”

# [ சிந்திக்க வைத்த பதிவு..! ]

John Durai Asir Chelliah

“ your eyes are so peculiar..”


“ your eyes are so peculiar..”

நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த இங்கிலிஷ் படத்தின் ஹீரோ பேசிய இந்த வசனத்தால்தான் , எனக்கு அந்த பிரச்சினை வந்தது...

ஒரு இரவு நேரத்தில் சென்னை அபிராமி தியேட்டரில் , ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டிருந்தோம்....கல்லூரி காலத்தில்.... ஹாஸ்டல் நண்பர்களோடு...!
அப்போது ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது... [இப்போதும் அப்படித்தான்..! ]
.அந்தப் படத்தின் ஒரு இடத்தில் ஹீரோ , ஹீரோயினைப் பார்த்து இப்படிச் சொல்வான்...

“your eyes are so peculiar..”

அந்தக் காட்சியோடு “இன்டர்வெல்” ....

நண்பர்களோடு தியேட்டர் கேண்டீன் பக்கம் வந்தோம்...
அப்போதுதான் நண்பன் பாபு ‘திடீர்’ என என்னைப் பார்த்து , இப்படிக் கேட்டான்...
“ஜான்... பெகுலியர் என்றால் என்ன..?”

எதிர்பாராத இந்தக் கேள்வியால் நான் திணறிப் போனேன்...அவசரமாக பாத்ரூம் போவதாக சொல்லி விட்டு எஸ்கேப் ஆனேன்...!
பாபு எதற்கு என்னிடம் சந்தேகம் கேட்டான்...? அவனுக்கும் தெரியாதா..? அல்லது சோதித்துப் பார்க்கிறானா..? அது சரி.. Peculiar என்றால் என்ன..?

இடைவேளை முடிந்து மீண்டும் படம் போட்டு விட , எல்லோரும் அவரவர் இருக்கையை இருட்டில் தேடி அமர்ந்தோம்...எனக்கு ஏனோ இருப்புக் கொள்ளவில்லை..!

படம் முடிந்து இரவு ஒரு மணிக்கு ஹாஸ்டலுக்கு வந்து , ஓடோடிச் சென்று டிக் ஷனரியை தேடிப் புரட்டினேன்...

“ Peculiar – தனிப்பட்ட , விசித்திரமான ”

....... அன்றிலிருந்து இன்றுவரை peculiar என்ற வார்த்தையைப் படிக்கும்போதெல்லாம் , இந்த அபிராமி சம்பவம் நினைவுக்கு வரும்...

# இன்னொரு நாள் ,ஒரு பத்திரிகை அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தபோது ..
“சிவாஜி spontaneous actor .. அதை நிரூபிக்கிற மாதிரி ஏதாவது ஒரு காட்சி எழுதிக் கொடுங்க...” என்று ஒரு பத்திரிகை நண்பர் என்னிடம் கேட்டு விட்டு , உடனடியான பதிலை எதிர்பார்க்க ... Spontaneous என்றால் என்னவென்று தெரியாமல் நான் முழி முழி என்று முழிக்க...
அப்புறம் கேட்டுத் தெரிந்து கொண்டது...
spontaneous என்றால் ... “தன்னிச்சையான..சுயமான..” .!

# Water scarcity.... congested area... இப்படி நிறைய ஆங்கில வார்த்தைகளை , நெருக்கடியான நேரங்களில் கற்றுக் கொண்டதால்தான் இன்னும் நினைவில் நிற்கின்றன...!

# ஆம்... நெருக்கடியான நேரங்கள் ,
சில மனிதர்களை மட்டும் புரிய வைப்பதில்லை..!
பல வார்த்தைகளையும் , புரிய வைக்கிறது..!
மனதில் பதிய வைக்கிறது...!

..... வாழ்க்கையையும் கூட புரிய வைக்கிறது...!!



John Durai Asir Chelliah

Sunday, October 18, 2015

ஒவ்வொரு சவாலையும் , சந்தர்ப்பம் என எண்ணிக் கொண்டால்..சாத்தியமாகாத வெற்றிகள் , சத்தியமாய் இந்த உலகத்தில் இல்லை...!


ஒவ்வொரு சவாலையும் ,
சந்தர்ப்பம் என எண்ணிக் கொண்டால்..சாத்தியமாகாத வெற்றிகள் , சத்தியமாய் இந்த உலகத்தில் இல்லை...!

இந்தப் படத்தில் உள்ளவர் பெயர் ஐசனோவர் ..இவர்தான் அமெரிக்காவின் முப்பத்தி நான்காவது அதிபராக 1953 ஆம் ஆண்டு முதல் 1961ஆம் ஆண்டு வரை இருந்தாராம்...
இவரால் ஒரு சூப்பர் ஹிட் தமிழ்ப் பாடல் , ஸ்ரீதர் காலத்திலேயே உருவாகி இருக்கிறது...

“காதலிக்க நேரமில்லை” – இந்தப் படத்தின் பாடல் கம்போசிங் செய்வதற்காக இயக்குனர் ஸ்ரீதரின் அலுவலகத்தில் கண்ணதாசன் , எம்.எஸ்.வி. ..இருவரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க....
பக்கத்தில் உள்ள அறைக்குள் ஸ்ரீதர் தன் குழுவினருடன் கதை விவாதத்தில் [ டிஸ்கஷன் ] இருந்தாராம்...

அப்போது எம்.எஸ்.வி.யின் பக்கத்தில் இருந்த ஒருவர் , செய்தித்தாளில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஐசனோவர் பற்றி படிக்க , ஊர் உலகம் தெரியாத வெள்ளந்தி விஸ்வநாதன் , கண்ணதாசனிடம் “ யாரண்ணே அந்த ஐசனோவர் ..?” என்று கேட்க , கண்ணதாசன் சிரித்துக் கொண்டே .. “அடே மண்டு... அவர் அமெரிக்க நாட்டு ஜனாதிபதியாக இருந்தவர்..உனக்கு தெரியாதா..?” எனக் கேட்க...

விஸ்வநாதனுக்கு ஏனோ..அந்த ஐசனோவர் என்ற பெயர் பிடித்துப் போக...திடீர் என உரத்த குரலில்... “ஐசனோவர்…. ஆவலோவா…” என்று வாய்க்கு வந்த வார்த்தைகளை ராகத்தோடு கத்த....
சட் என டிஸ்கஷன் நடந்த அறையிலிருந்து எட்டிப்பார்த்த ஸ்ரீதர் ....” அதுதான்..அதேதான்.... விஸ்வநாதன் அண்ணே ...இப்போ நீங்க கத்தினீங்களே அதுதான் ட்யூன்” என்று சொல்லி விட்டு மீண்டும் அறையினுள் நுழைந்து விட்டார்....

கண்ணதாசனுக்கும் , எம்.எஸ்.விக்கும் எதுவும் புரியவில்லை..புலப்படவில்லை...
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த எம்.எஸ்.வி. வேறு ஒரு பாடல் ஒலிப்பதிவு காத்திருக்கிறது என்று அங்கிருந்து புறப்பட முயற்சிக்க...
“ “இங்கே பாருடா விசு.... இப்போ என் கையிலே செலவுக்கே காசில்லை... ஸ்ரீதருக்கு இன்னைக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதினா , கணிசமா ஒரு தொகை கொடுப்பாரு. இந்த நேரத்தில என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போய்டாதே விச்சு... டேய்... எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா….!” என்று தன்னை அறியாமல் உரத்த குரலில் சொல்ல...
டிஸ்கஷன் அறைக் கதவு மீண்டும் திறந்தது.... தலையை மட்டும் வெளியே நீட்டிய ஸ்ரீதர் ...

“கவிஞரே, இப்போ சொன்னீங்களே .... அதுதான் பல்லவி..ஆரம்பியுங்க..” என்று சொல்லி விட்டு மீண்டும் அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டார் ஸ்ரீதர்....
இப்போது கண்ணதாசனுக்கும் , விஸ்வநாதனுக்கும் அதிர்ச்சி....
விஸ்வநாதன் கேட்டார் ...“ஏண்ணே, நம்ம ஸ்ரீதருக்கு இன்னைக்கு என்ன ஆச்சு….? நான் வாய்க்கு வந்தபடி கத்தினதை ட்யூனா செலக்ட் பண்ணிட்டார்.... “வேலை கொடுடா விஸ்வநாதா” ன்னு நீங்க கேட்டதை பல்லவியா செலக்ட் பண்ணிட்டார்... என்னண்ணே நடக்குது இங்கே..?”

கண்ணதாசன் சொன்னார்... “ஓகே விச்சு...இது காலம் நமக்கு கொடுக்கற ஒரு சந்தர்ப்பம்.... இதில வெற்றியை சாத்தியமாக்கிக் காட்டணும்...நாம ஆரம்பிக்கலாம்...நீ கத்தியதுதான் ட்யூன்... நான் சொன்னதுதான் பல்லவி... ஆரம்பிப்போம்.”
என்று சொல்லி ,சரசரவென வரிகளை சரம் சரமாய் அடுக்க , அதற்கு எம்.எஸ்.வி. ரகம் ரகமாய் ராகமாலை தொடுக்க ...அப்படி உருவானதுதான்...
“மாடி மேல மாடி கட்டி கோடிகோடி சேர்த்து விட்ட சீமானே...
விஸ்வநாதன்.... வேலை வேண்டும்"

# ஒவ்வொரு சவாலையும் ...சந்தர்ப்பம் என எண்ணிக் கொண்டால்....
சாத்தியமாகாத வெற்றிகள் , சத்தியமாய் இந்த உலகத்தில் இல்லை...!

# அக்டோபர் 17....
கவியரசர் கண்ணதாசனின் நினைவு நாள்...!

சுஜாதா பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று கண்ணில் பட்டது...

சுஜாதா பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று கண்ணில் பட்டது...
‘ப்ரியா’ ..
இந்தப் படம் 1978 இல் வெளியானது நன்றாக ஞாபகம் இருக்கிறது... ஆனால் திரும்ப திரும்ப திரையரங்குகளுக்குப் படை எடுத்த நாங்கள் , எத்தனை தடவை இந்தப் படத்தைப் பார்த்திருப்போம் என்பது எங்களுக்கே ஞாபகம் இல்லை...
எங்கள் எல்லோருக்கும் பிடித்த இந்த “ப்ரியா” ஒரே ஒருவருக்கு மட்டும் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை..
“ப்ரியா”வைப் பிடிக்காத அந்த ஒருவர்.... அந்தப் படத்தின் கதையை எழுதிய சுஜாதா..
இதோ..அது பற்றி சுஜாதா...
“.... ‘ப்ரியா’ சினிமாவானது ஒரு கூத்து...
பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். ஆனால் கதை இஷ்டத்திற்கு மாற்றப்பட்டது...
..இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது...”
# “பிரியா” கதை , சினிமாவுக்காக சித்திரவதை செய்து கொல்லப்பட்டதை , சுஜாதாவால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
சிறிது காலத்திற்குப் பின் சுஜாதா எழுதிய 'உன்னைக் கண்ட நேரமெல்லாம்' என்ற கதையில் , கணேஷும், வசந்த்தும் இப்படி உரையாடுவது போல எழுதி தன் குமுறலைக் கொட்டித் தீர்த்துக் கொண்டார் சுஜாதா ...
### “வசந்த் அதிகக் கோபத்தில் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தான்.
ஏராளமான காகிதங்களின் மத்தியில் 77 உறிஞ்சிக் கொண்டிருந்த கணேஷ் அவனை நிமிர்ந்து பார்த்து "எதுக்காக இப்படி வெட்டியா நடக்கிறே? என்ன ஆச்சு வசந்த்?"
"அந்த ஆள் மேல கேஸ் போடணும் பாஸ்."
"எந்த ஆள்? எந்த கேஸ்?"
"எழுத்தாளர் சுஜாதா! இந்த மாதிரி நம்ம ரெண்டு பேரையும் கேலிக்கிடமா படம் எடுக்க அனுமதிச்சதுக்கு."
"என்ன படம்?"
"ப்ரியா."
"எழுத்தாளர் என்ன செய்வார்? அவர் புஸ்தகத்திலே சரியாத்தானே எழுதியிருந்தார்?"
"படம் எடுத்தவர்கள் பேரில போடலாம்னு பார்க்கிறேன்."
"அவுங்க என்ன செய்வாங்க? புஸ்தகத்திலே இருந்த மாதிரி படம் எடுத்தா படம் போண்டி ஆயிடும்...... .......இதுக்கெல்லாம் கோவிச்சுண்டா என்ன ஆறது? விட்டுத் தள்ளு. படம் ஓடறது பாரு. கிளி, டால்பின்னு என்னமோ கலந்து கட்டி இருக்காங்களாமே?" கணேஷ் வாய்விட்டுச் சிரித்தான்.
"என்ன இருந்தாலும் எனக்கு சமாதானமாகலே பாஸ். நீங்க அந்தப் படத்தைப் பார்த்தீங்கன்னா..."
"முதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்க. ஒரு லாயர் கேஸ் போடவே கூடாது. கேஸ் போட வைக்கணும்."
# இப்படி எழுதித் தன் குமுறலைக் குறைத்துக் கொண்டிருக்கிறார் சுஜாதா.... கொந்தளிப்பு குறைந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்க ஆரம்பித்தார்...
சினிமாவின் சூத்திரங்களுக்கு ஏற்ப தன்னை “அப்டேட்” செய்து கொண்டார்...
அவரின் அசத்தல் வசனங்கள் அனைவரையும் கவரும் அளவுக்கு , சினிமாவை தன் வசப்படுத்திக் கொண்டார்...
# இதோ..சில சாம்பிள்கள்.....
# அந்நியனில் தன் உள்ளங்கையில் முத்தமிட்ட நந்தினியிடம் ரெமோ: “ஹேய் என்ன கைல முத்தம் குடுக்கிற .... நான் என்ன போப்பாண்டவரா..?”
#“தப்புல ஸ்மால், லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜெல்லாம் சொல்ல, அது என்ன பனியன் சைஸா?”
# சரி... சினிமாவை அடியோடு வெறுத்த சுஜாதா , காலப்போக்கில் அந்த சினிமாவுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு வெற்றியும் பெற்றது எப்படி..?
சுஜாதா ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது...
“வாழ்க்கையே படிப்படியான சமரசங்களால் ஆனது.”
# நிஜம்தானே...!!!
எவ்வளவு பெரிய உண்மையை , எவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டார் சுஜாதா..?!!
ஆம்...“வாழ்க்கையே படிப்படியான சமரசங்களால் ஆனது.”

Wednesday, October 14, 2015

“சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு , எந்த ஒரு விமர்சனத்தையும் சந்திக்கும் துணிவு வேண்டும்...!”

“சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ,
எந்த ஒரு விமர்சனத்தையும் சந்திக்கும் துணிவு வேண்டும்...!”
இயக்குனர் பாலச்சந்தர் இயக்கி பிரமிளா நடித்த “அரங்கேற்றம்” படம் வெளிவந்த சமயம் , தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பு அரங்கேறியது...!.
“அரங்கேற்றம்” கதையை சில பத்திரிகைகள் பாராட்டினாலும் , பல பத்திரிகைகள் கடுமையாகத் தாக்கின...!
படம் பார்த்த ரசிகர்களில் பலர் பாலசந்தரை பாராட்டினாலும் , சிலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்...
“அரங்கேற்றம்” கதாநாயகியை ஒரு பிராமணப் பெண்ணாக பாலசந்தர் காட்டியதால் , பிராமணர் சங்கங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தார்கள்...
சரி.. பாலசந்தர் எதற்காக அப்படி ஒரு “அரங்கேற்றம்” படத்தை எடுத்தார்..?
காரணம் இதுதான்...!
1972-ல் 'வெள்ளி விழா' படம் வாகினி ஸ்டூடியோவில் படமாகிக் கொண்டிருந்த சமயம்....
திடீரென்று இயக்குனர் பாலசந்தருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாம்.... அதனால் உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு காரில் புறப்பட்டாராம் பாலசந்தர்...
அதன்பின் நடந்தது என்ன..?
இதோ... பாலசந்தரே கூறுகிறார்:
“ஜெமினி அருகே கார் நின்றது. தனிமையில் இருந்த நான், என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தேன். அப்போது, 'கண்ணா நலமா' பேனர் கண்ணில் பட்டது. `இத்தனை ஆண்டுகள் கலைத்துறையில் இருந்து என்ன சாதித்து விட்டோம்' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இதற்குக் கிடைத்த பதில் `ஒன்றுமில்லை' என்பதுதான். `இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை. ஏதும் சாதிக்காமலேயே போய்விடுவோமா?' என்று எண்ணியபோது, கண்களில் நீர்த்துளிகள் மல்கின.
கார் நகரத் தொடங்கியது. என் சிந்தனைகளும் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. அப்போது, கதீட்ரல் ரோட்டில் என் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் இருந்த 'புன்னகை' பேனர்களைப் பார்த்தேன். சிறிது ஆறுதல். `ஏதும் செய்யாமல் இல்லை. ஏதோ நம்மால் முடிந்ததைச் செய்துதான் இருக்கிறோம்' என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். என் மனச்சுமை சிறிது இறங்கியது போல் இருந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய எனக்கு புதிய வேகமும், தெம்பும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டன. `எதையாவது புதுமையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் சினிமா துறையில் நான் நின்றாலும் சரி, வீழ்ந்தாலும் சரி' என்று முடிவு எடுத்தேன்.
'வெள்ளி விழா' படத்தை முடித்து திரையிட்டவுடன், அரங்கேற்றம் படத்தை எடுத்தேன்...”
# இதுதான் “அரங்கேற்றம்” உருவான கதை...!
இதுபற்றி பாலசந்தர் :
"இந்தப் படத்தைப் பொறுத்தவரை, வறுமையின் எல்லையை படம் பிடித்துக்காட்ட விரும்பினேன். அதற்கு வைதீக பிராமணக் குடும்பம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதை கருவாகக் கொண்டு, கற்பனையில் கதையை உருவாக்கினேன்..."
# சரி... இப்படி எதிர் விமரிசனங்கள் ஈட்டி போல பாய்ந்து வரும் எனத் தெரியாமலா பாலசந்தர் “அரங்கேற்றம்” படத்தை எடுத்திருப்பார்..?
“சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ,
எந்த ஒரு விமர்சனத்தையும் சந்திக்கும் துணிவு வேண்டும்...!”
அந்தத் துணிவு பாலசந்தரிடம் இருந்தது...
அதனால்தான் “அரங்கேற்றம்” பிறந்தது...!

“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே”....



“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே”....
பாசமலர் படத்திற்காக கண்ணதாசன் எழுதிய காவிய வரிகள்...
ஆனால் அந்த பாசமலர் சாவித்திரியின் கடைசிக் காலம் கண்ணீரில்தான் கரைந்து மறைந்தது..
அவரது இறுதி நாட்களில் அவரைச் சந்தித்த கமல் இப்படிச் சொல்லி இருந்தார்...
“ராஜபார்வை படத்தின் தொடக்க விழா அழைப்பிதழைக் கொடுக்க சாவித்திரி அம்மாவை தேடி போனேன்... அவர் இருந்த சந்தில் என் கார் போகாது. நிறுத்திவிட்டு விசாரித்து போனேன்... பத்துக்கு பத்து அறை. வாசலில் குத்துக் காலிட்டு உட்கார்ந்து இருந்தார்...அழகெல்லாம் வடிந்து போய், ஒல்லியாய், கருப்பாய்....
ஒரு காலத்தில் மிக கம்பீரமாய் காரை விட்டு இறங்கி எல்லோருக்கும் முதலில் சிரிப்பை பரிமாறும் அந்த நடிப்பு தேவதை என் கண்ணில் வந்து போனது...
என்னை கண்டதும் மெல்ல தயங்கி, கண்டுகொண்ட பின், “வா வா உள்ள..” என்று அழைத்து,
“ உன்னை உக்கார வக்க கூட இங்க வசதி இல்ல..”ன்னு சொன்னதும்,
“இங்கயா இருக்கீங்க..?” என்று கேட்டதும், சாவித்திரி அம்மா “எனக்கு என்ன குறை நல்லாத்தான் இருக்கேன்..” என சொல்ல...
கண்ணீரை மறைத்து கொண்டு “என் சொந்த பட பூஜை ..அதுதான் உங்கள கூப்பிட வந்தேன்..”....என்று சொல்லி விட்டு .. விம்மி புறப்பட்டு வர இருந்த அழுகையை அடக்கி கொண்டு கிளம்பினேன்" ..
# கமலுக்கு மட்டும் அல்ல...சாவித்திரியின் கடைசிக் காலம் பற்றி அறிந்தால்...எல்லோருக்குமே கண்ணீர் வரும்..!
சாவித்திரியின் பொன்னான வாழ்வு பொலிவு இழந்ததற்குக் காரணம் அவர் கால்களில் தங்கக் கொலுசைஅணிந்ததுதான் எனச் சிலரும் ...
தவறான வாஸ்துப்படி , தன் வீட்டில் தென் மூலையில் ஒரு நீச்சல் குளம் கட்டியதால்தான் சாவித்திரிக்கு வீழ்ச்சி ஏற்பட்டது என சிலரும் சொன்னதுண்டு...!
இந்தப் பாசமலரின் வாழ்வு , பாதியிலேயே கருகி உதிர்ந்ததற்கு காரணம் ..?
சாவித்திரி நடித்து , தயாரித்து, இயக்கிய “பிராப்தம்” படத்திற்காக ...
கண்ணதாசன் எழுதிய " தாலாட்டு பாடி தாயாக வேண்டும்” பாடலின் வரிகள் நினைவில் வருகின்றன....வழிகின்றன...கண்ணீரோடு !!!
“ஆறாது ஆறாது அழுதாலும் தீராது
ஆனாலும் வழி என்ன தாயே
அறியாத பெண்ணல்ல கனவோடு உறவாடு
சுமை தாங்கி கல்லாக நீயே
கடலலை ஏன் உறங்கவில்லை
கடவுளிடம் ஏனோ கருணை இல்லை.."

Tuesday, October 13, 2015

அடிக்கடி கோபப்பட்டால் ... கோபத்திற்கு மரியாதை இல்லை!! கோபமே படாவிட்டால் ... நமக்கே மரியாதை இல்லை!!

அடிக்கடி கோபப்பட்டால் ...
கோபத்திற்கு மரியாதை இல்லை!!
கோபமே படாவிட்டால் ...
நமக்கே மரியாதை இல்லை!!

ஒருமுறை சிவாஜியைப் பார்க்க அவரது அன்னை இல்லத்துக்குச் சென்றிருக்கிறார் கண்ணதாசன் ..
வழக்கமான வாஞ்சையோடு சிவாஜி... “வாடா கவிஞா...” என வரவேற்க,
சட்டென்று கோபமாகி, “என்னடா நடிகா ? ” எனக் கேட்டு விட்டாராம் கண்ணதாசன்....

எப்படி இருந்திருக்கும் சிவாஜிக்கு..?

இதன் பின் இருவரும் சிலகாலம் பேசிக் கொள்ளவில்லையாம்...
சந்திக்கும் வேளைகளில் “மௌனம்தான் அவர்கள் தாய் மொழி”

அப்புறம் என்ன..?
சிலகாலம் கடந்த பின் இருவரின் நட்பும் ....இன்னும் நெருக்கமாக ஆகிப் போனதாம்...!!!

சிவாஜிக்கும் , கண்ணதாசனுக்கும் ஒன்று மட்டும் நன்கு தெரிந்திருக்கிறது...

# “நம் கோபம் மதிக்கப்பட வேண்டும் என்றால் ...
சில காலம்
மௌனமாக இருந்தாலே போதும்..

Sunday, October 11, 2015

எல்லாரையும் நம்புங்கள் .. துரோகம் பழகி விடும்...!



“எல்லாரையும் நம்புங்கள் .. துரோகம் பழகி விடும்...!
எவரையுமே கண்டு கொள்ளாதீர்கள் ... தன்னம்பிக்கை தன்னால் வரும்..”

# தன்னம்பிக்கை ஊட்டும் இந்த வரிகள் , இன்று என் கண்ணில் பட்ட அதே வேளையில் ,
கே.பாக்யராஜின் தன்னம்பிக்கையை காட்டும் தகவல் ஒன்றும் , “ஒரு கைதியின் டைரி” யாக என் முன்னே வந்து விழுந்தது...

‘ஒரு கைதியின் டைரி’.....இது கமல் நடித்து , பாரதிராஜா இயக்கிய மாபெரும் வெற்றிப் படம்...
கதை கே.பாக்யராஜ் எழுதியது...

இந்தப் படத்தை இந்தியில் “ஆக்ரி ரஸ்தா” என்ற பெயரில் அமிதாப் நடிக்க , பாக்யராஜே இயக்கினார்...

க்ளைமாக்ஸ் காட்சி...பாக்யராஜ் , அமிதாப்பிடமும் , தயாரிப்பாளரிடமும் காட்சியை எடுத்துச் சொல்ல ... அவர்கள் இருவருமே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்..
ஏனென்றால் ‘ ஒரு கைதியின் டைரி ’ யில் , கமல் வீரசிவாஜி சிலை வேடத்தில் வந்து வில்லனைக் கொல்லுவார்...ஆனால் அது பாக்யராஜ் எழுதிய ஒரிஜினல் க்ளைமாக்ஸ் இல்லை... பாதாள சாக்கடை சண்டைதான் பாக்யராஜ் எழுதிய ஒரிஜினல் க்ளைமாக்ஸ்...
‘ ஒரு கைதியின் டைரி ’ க்ளைமாக்ஸ் நேரத்தில் , கமலுக்கும் பாரதிராஜாவுக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு வர... பாக்யராஜ் எழுதியிருந்த க்ளைமாக்ஸை மாற்றி , படத்தை முடித்து விட்டாராம் பாரதிராஜா... ஆனாலும் ... படம் சூப்பர் ஹிட்...

இப்போது ஹிந்தியில் தானே இயக்கும் வாய்ப்பு வந்தபோது , தன் சொந்த க்ளைமாக்ஸ்சை படம் பிடிக்க ஆசைப்பட்டார் பாக்யராஜ்...
ஆனால் அமிதாப் ஆழ்ந்து யோசித்து விட்டு...“ தமிழில் வந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற அந்த சிவாஜி சிலை க்ளைமாக்ஸை ,தேவை இல்லாமல் ஏன் மாற்ற வேண்டும்” என கேட்க... பதட்டமானார் பாக்யராஜ்...

“அதை விட இது நல்லா வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு ஸார்..” என்று பாக்யராஜ் தன்னம்பிக்கையுடன் சொல்ல ...
தயாரிப்பாளர் எதுவும் பேசாமல் பாக்யராஜ் கேட்ட பாதாள சாக்கடை செட்டை பத்து லட்சம் ரூபாய் செலவில் போட்டு விட்டார்...அதன் பின் பாக்யராஜிடம் வந்த தயாரிப்பாளர் , “ இங்கே பாருங்க பாக்யராஜ் சார்...செலவை குறைப்பதற்காக நான் செட்டை போடாமல் இருக்கிறேன் என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது..அதனாலதான் இந்த செட்டை போட்டிருக்கிறேன்...ஆனால்...இப்பவும் சொல்கிறேன்... தமிழில் வந்த க்ளைமாக்ஸ் சூப்பர்... அதை மாற்ற வேண்டாம்.. அப்படியே எடுத்து விடுங்கள்” என்றார்....

தரமசங்கடமான பாக்யராஜ்..”ஒண்ணு பண்றேன்...நீங்க போட்ட செட்டில் என்னோட க்ளைமாக்சை எடுத்துக்கிறேன்..அப்புறம் நீங்களும் அமிதாப்பும் சொல்றமாதிரி தமிழ் பட க்ளைமாக்ஸ்சும் தனியா எடுத்துக்கறேன்.. எது நல்லா இருக்குதோ , அதை வச்சுக்குவோம்..”என்றார்..

பாக்யராஜின் இந்த தன்னம்பிக்கை அமிதாப்பையே கொஞ்சம் அசர வைத்தது... அந்த நம்பிக்கையில் பாக்யராஜ் சொன்னபடி பாதாள சாக்கடையில் குதித்து விட்டார் அமிதாப்...

க்ளைமாக்ஸ்சை தான் நினைத்தபடி எடுத்து முடித்தார் பாக்யராஜ்... அனைவரும் அசந்து போனார்கள் ..அமிதாப் உட்பட...
அப்புறம் என்ன..?

“ ஆக்ரி ரஸ்தா” தமிழை விட ஹிந்தியில் பிரமாதமாக ஓடியதாம்...
அந்த வெற்றிக்கு காரணம் ...சந்தேகமில்லாமல் பாக்யராஜின் தன்னம்பிக்கைதான் ...!

ஆம்... தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு ,
எல்லா வாசல் கதவுகளும் திறந்து வரவேற்பு அளிக்கும்...
[ப.பி]
கடவுள் ஒரு கதவை மூடி விட்டால் , மறு கதவை திறப்பார் என்று காத்திருப்பது ..நம்பிக்கை..!
மூடிய கதவை உடைக்க கையில் சுத்தியலை எடுத்து விட்டால் ... அதுதான் தன்னம்பிக்கை..!!

சில விஷயங்களை சிம்பிளாக சொல்ல சிலரால்தான் முடியும்... நம்ம கவுண்டமணி போல...!!





சில விஷயங்களை சிம்பிளாக சொல்ல சிலரால்தான் முடியும்...
நம்ம கவுண்டமணி போல...!!!

# மற்றவர்களுக்கு உதவும் மகத்தான கருணை உள்ளம் எம்.ஜி.ஆருக்கு எங்கிருந்து வந்தது...?
ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறிக் காட்டும் இமய நடிப்பாற்றல் சிவாஜிக்கு எங்கிருந்து வந்தது..?
தனக்கென தனி ஸ்டைல் உருவாக்கி சூப்பர்ஸ்டார் ஆகும் சூட்சுமம் ரஜினிக்கு எங்கிருந்து வந்தது..?
உயிரைக் கொடுத்து உலக நாயகன் என்ற பெயர் வாங்கும் உந்து சக்தி கமலுக்கு எங்கிருந்து வந்தது..?

காட்சியை சொன்னவுடன் வார்த்தைகள் தானாக வந்து விழும் அந்த கவிதை வரம் கண்ணதாசனுக்கு எங்கிருந்து வந்தது..?
பண்ணைபுரத்திலிருந்து புறப்பட்டு வந்து பாட்டு ராஜ்யத்தில் பல காலம் ராக ராஜாங்கம் நடத்திய அந்த திறமை இளையராஜாவுக்கு எங்கிருந்து வந்தது..?

# இந்தக் கேள்விகளுக்கு நாம் எவ்வளவோ விரிவான விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருக்கலாம்...
ஆனால் , கவுண்டமணி இதற்கெல்லாம் கொடுக்கும் சிம்பிள் வார்த்தை ... “..ப்ளட் ..”
விகடனில் [ 2-6-1996 ] வெளிவந்த பேட்டியில் கவுண்டரின் கலக்கல் பதில்கள்...

விகடன்: “தியேட்டர்ல படம் ஆரம்பிச்சி 20 நிமிஷம் ஆனதும் சடார்னு ப்ரேமுக்குள்ள நுழையறீங்க. நீங்க பேசுறதுக்கு முன்னாடியே உங்க முகத்தை பார்த்து தியேட்டர் சிரிப்புல அதிருது. விசில் பறக்குது. எப்படி சாதிச்சீங்க?”
கவுண்டர்: “இன்னிக்கி நாட்ல உள்ள ஏகப்பட்ட பிரச்னைகளை மீறி மக்களை சிரிக்க வைக்கிறது என்கிற விஷயத்தை ஒரு பார்முலா மாதிரி போட்டு கண்டு புடிச்சிற முடியாது. சிரிக்க வைக்கக்கூடிய சங்கதி தானாகத்தான் ஒருத்தனுக்குள்ள அமையனும். அது 'ப்ளட்'னு வச்சுக்கோங்களேன்...”

விகடன்: “அந்த பெட்ரோமாக்ஸ் காமடி?”
கவுண்டர்: “ஆமாமா. 'இதுல எப்பிடிண்ணே லைட் எரியுது?'ன்னு செந்தில் கேப்பான். 'அடேய்.. இதுதான் மேண்டில். இதுலதான் பளீர்னு லைட் எரியுது'ன்னு நான் சொல்லிட்டு இருக்கும்போதே செந்தில் மேண்டிலை எடுத்து நசுக்கிப்புட்டு, 'என்னண்ணே.. ஒடச்சி புட்டீங்க?'ன்னு கேப்பான் (கவுண்டர் முகத்தில் சிரிப்பு பரவுகிறது). அப்ப நான் உடனே பதில் சொல்லாம கேமரா பக்கம் திரும்பி டென்ஷனா ஒரு லுக் விடுவேன். ஆடியன்ஸ் விழுந்து பொறண்டு சிரிக்கும்...அந்த இடத்துல அப்படி ஒரு லுக் விட்டாலே போதும்னு யார் சொல்லி குடுத்தா? நமக்கா தோணுது. அதைத்தான் ப்ளட்னு சொல்ல வர்றேன்...”

# ஆம்.. கவுண்டர் சொன்னது கரெக்ட்தானே....!

யாரும் சொல்லாமல் தானாக ஓடி வரும் உணர்வுகளுக்கு , திறமைக்கு ,சாமர்த்தியத்துக்கு.... "ப்ளட்" என்று சொல்லாமல் , வேறு என்ன பெயர் சொல்வது..?

“கவுண்டர் கவுண்டர்தான்..!”

# [ப.பி.]..காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பது உசிதமில்லை என்று நிரூபித்த சமீபத்திய படங்கள் :
எலி (வடிவேலு), 49 O (கவுண்டமணி) !!

# “சேம் ப்ளட்..”

'ஒரு நிமிஷம் உட்காருங்கள்” என்று எம்.ஜி.ஆர். சொல்ல ,என்னவோ ஏதோ என தயங்கியபடி அமர்ந்தாராம் ஸ்ரீதர்...

எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் , 1977 ஆண்டு “பொம்மை” சினிமா இதழுக்காக நடிகை லதாவுக்கு பேட்டி கொடுத்தபோது எடுத்த படமாம் இது..!
எம்.ஜி.ஆர்.- லதா இணைந்திருந்த இந்தப் படத்தைப் பார்த்தபோது உள்ளத்தில் சில “உரிமைக்குரல்” நினைவுகள் ஒலித்தன...!
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.”
இந்தக் குறளுக்கும் , உரிமைக் குரலுக்கும் என்ன சம்பந்தம்...?
# எம்.ஜி.ஆரை வைத்து படமே இயக்காத ஸ்ரீதர் முதன்முதலாக “உரிமைக்குரல்” படத்தில்தான் ஒன்றாக இணைகிறார்... படப் பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பாக , எம்.ஜி.ஆரை அவரது தோட்டத்தில் சந்தித்து படம் சம்பந்தமான விஷயங்களைப் பேசி இருக்கிறார் ஸ்ரீதர்... அந்த சமயத்தில் ஸ்ரீதர் பொருளாதார ரீதியாக சிறிது சிரமத்தில் இருந்திருக்கிறார்..! பேச வேண்டிய விஷயங்களைப் பேசி விட்டு விடைபெற எழுந்தாராம் ஸ்ரீதர்...
“'ஒரு நிமிஷம் உட்காருங்கள்” என்று எம்.ஜி.ஆர். சொல்ல ,என்னவோ ஏதோ என தயங்கியபடி அமர்ந்தாராம் ஸ்ரீதர்...
எம்.ஜி. ஆர். தன் செயலாளரை கூப்பிட்டு , உடனடியாக ஒரு கடிதம் எழுதச் சொல்லி , அதில் தன் கையெழுத்தையும் போட்டு , ஸ்ரீதரிடம் கொடுத்தாராம்...
“நான் ஸ்ரீதருக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க ஒப்புதல் அளிக்கிறேன். அவர் படத்துக்கு முன்னுரிமை தந்து மூன்று மாதங்களுக்குள் முடித்துத்தர சம்மதிக்கிறேன்” .. என்று அக்கடிதத்தில் எம்.ஜி.ஆர். எழுதியிருந்தாராம்...
சிலிர்த்துப் போனாராம் ஸ்ரீதர்...
“நீங்கள் வாய்மொழியாக சொன்னது போதாதா ? இப்படி எழுதி கையெழுத்தெல்லாம் போட்டுக் கொடுக்க வேண்டுமா ?” என்று உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்த குரலில் ஸ்ரீதர் கேட்க.. எம்.ஜி.ஆர்.சொன்னாராம்...
“ஸ்ரீதர்...! இது உங்களுக்காக அல்ல...பணம் கொடுக்கும் பைனான்சியர்களுக்காக....! இது பெரிய பட்ஜெட் படம்... பணம் பற்றாக்குறை ஏற்பட்டு நீங்கள் கஷ்டப்படக் கூடாது.... இந்தக் கடிதத்தைக் காட்டினால், விநியோகஸ்தர்களும் , பைனான்சியர்களும் உடனடியாக உங்களுக்கு பணம் கொடுக்க முன்வருவார்கள்..” என்றாராம் எம்.ஜி.ஆர்.
இதைக் கேட்டவுடன் கண் கலங்கிவிட்டாராம் ஸ்ரீதர்..
ஆம்.. எம்.ஜி.ஆர். சொன்னது போலவே... ஸ்ரீதர் படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கப் போகிறார் என்று தெரிந்ததுமே விநியோகஸ்தர்களும் , பைனான்சியர்களும் ஸ்ரீதர் வீடு தேடி வந்து விட்டார்களாம்.... “உரிமைக்குரல்” படம் தயாராவதற்கு முன்பே தேவையான பணம் உடனடியாக கிடைத்து விட்டதாம்...
# எம்.ஜி.ஆர். - ஸ்ரீதர் நட்புறவை நினைக்கும்போது ....
“உரிமைக்குரல்” படத்தில் வரும் “ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் ”..பாடலில் வரும் சில வரிகள் என் நினைவுக்கு வருகின்றன...
“உடலின் பின்னோடு உலவும் நிழல்கூட
இருளில் பிரிகின்றது
வெளிச்சம் வரும் போது உடலை நிழல்தேடி
இணைய வருகின்றது
என் மனம் பொன்மனம் என்பதை காணலாம்
நாளை அந்த வேளை
வந்து என்னை சேரலாம்”
# “உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.”
- இந்தக் குறளுக்கு உரை எழுதச் சொன்னால் , ஒரு வார்த்தை கூட எழுதத் தெரியாது எம்.ஜி.ஆருக்கு...!
ஆனால் வள்ளுவன் சொன்ன அந்த வார்த்தைகளின் வழியில் வாழ்ந்து காட்டுவதைத் தவிர வேறொன்றும் அவருக்குத் தெரியாது..!
அதை யார் எம்.ஜி.ஆருக்கு கற்றுக் கொடுத்தார்கள் என நமக்குத் தெரியாது...!

ஆசியம்மா ... மனோரம்மா

ஆசியம்மா ... மனோரம்மா 
நெருங்கிய ஒருவர் இறந்து விட்டால் ...
நினைவலைகள் வெகு நேரம் ..
நெஞ்சில் அலை அலையாய் வந்து மோதும்...
மனோரமா... 
நம் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல , கூடவே வரும் சோக மேகம்...இன்று முழுவதும் என்னை மட்டும் அல்ல...என் போன்ற பலரையும் தொடரும்..
அந்த ஆச்சி மனோரமாவின் பல நினைவுகளில்... இதோ , ஒரு பழைய நினைவு...
பல காலம் முன்.... ஒரு காலை வேளையில்... மனோரமாவின் தாய் திடீர் என இறந்தபோது திகைத்துப் போய் நின்றாராம் ஆச்சி ...சோகத்தைப் பகிர்ந்து கொள்ள , சொந்தம் என்று எதுவும் இல்லை... அடுத்து என்ன செய்வது என எடுத்துச் சொல்ல , உறவும் எதுவும் இல்லை.. உதவவும் யாரும் இல்லையே என்று உள்ளம் வாடி நின்றாராம் மனோரமா....இதோ...அந்த அனுபவத்தை ஆச்சியே சொல்கிறார் :
“என் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். அவருக்கு சிகிச்சையளித்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவர் சிவாஜியின் குடும்ப டாக்டர். ஒரு நாள் காலையில் அம்மா இறந்து போக, அதை டாக்டரிடம் தெரிவித்தபோது அவர் வந்து பரிசோதித்து , அம்மாவின் மரணத்தை உறுதி செய்தார். பின் , நேராக சிவாஜி வீட்டுக்கு சென்றவர், அங்கு விபரம் கூறியிருக்கிறார்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில், சிவாஜி, கமலாம்மாள், பிரபு மூவரும் வந்து விட்டனர். அழுது கொண்டிருந்த என்னை ஆறுதல் படுத்திய சிவாஜி , "அம்மாவ எப்ப அடக்கம் பண்றதா இருக்கே... சொந்தக்காரங்களுக்கெல்லாம் தகவல் சொல்லிட்டியா?” என்றெல்லாம் விபரம் கேட்டவர்... “இங்க பாரும்மா… நீ எதுக்கும் கவலைப்படாதே. எப்போ எடுக்கிறதுனு மட்டும் சொல்லு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்..” னு சொல்லிட்டுப் போய் ஒரு வெண்பட்டுப் புடவையும், துளசி மாலையும் வாங்கிட்டு வந்தார் “அம்மாவுக்கு ஒரு மகனாக , நான் தான் காரியம் எல்லாம் பண்ணப் போகிறேன்!' என்று கூறிவிட்டுப் போனார்.
மறுநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் வந்து விட்டார் சிவாஜி. ...தலைப்பாகை கட்டிக்கிட்டு என் அம்மாவைக் குளிப்பாட்டி பட்டுப்புடவை போத்தி அம்மாவுக்கு ஒரு மகனா, எனக்கு அண்ணனா நின்னு எல்லா காரியங்களையும் செஞசார். அந்தவகையில் எங்க அம்மாவுக்கு அது நல்ல சாவு.
இறுதி காரியங்கள் எல்லாம் முடிந்த பின், எங்கள் வீட்டிற்கு வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு தயார் செய்து அனுப்பி வைத்தார். என் உடன் பிறந்த சகோதரன் கூட இப்படி செய்திருக்க மாட்டாரோ என்று நினைத்தேன். ஒரு மாபெரும் நடிகர், மகத்தான மனிதர் என் தாயாருக்கு செய்த மரியாதையைக் கண்ட போது, எனக்கு என் அம்மாவின் மீதே பொறாமை வந்தது. இந்த மரியாதை நமக்கு கிடைத்திருக்கக் கூடாதா என்று எண்ணினேன்.அவருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நினைத்துப் பார்க்கவே எனக்கு பெருமையாக உள்ளது..”
# ஆச்சிக்கு...பெருமை ஒரு பக்கம்... பொறாமை ஒரு பக்கம்... மாபெரும் கலைஞன் சிவாஜி செய்த மரியாதைகளை கண்டபோது , தன் தாய் மீதே பொறாமை வந்திருக்கிறது...
“இப்படிப்பட்ட இறுதி மரியாதை எனக்கும் வாய்க்காதா ..?” என்று ஆச்சி மனோரமாவின் அந்த பாவப்பட்ட இதயம் , பாசத்துக்காக ஏங்கி இருக்கிறது...
# அந்த உடன் பிறவா சகோதரன் சிவாஜி உயிரோடு இருந்திருந்தால் , இன்று மனோரமாவின் இறுதி ஆசை நிறைவேறி இருக்கும்...!
அவர்தான் ஏற்கனவே முதல் மரியாதையோடு எப்போதோ போய்ச் சேர்ந்து விட்டாரே...!
# எண்ணற்ற ஏக்கங்களும் , ஏராளமான ஏமாற்றங்களும் நிறைந்ததுதான் ஆச்சியின் வாழ்க்கை...!
# [ ப.பி. ] “சிலரின் வாழ்வில் அவர்கள் சந்தித்த மிகப்பெரிய ஏமாற்றங்கள்தான் ,
அவர்கள் மிகச் சிறந்தவர்களாக மாற , மிகப் பெரிய காரணமாகிறது.!”
# இதற்கு ஆச்சியை விட சிறந்த உதாரணம் யாரும் இருக்க முடியாது...!


John Durai Asir Chelliah