Sunday, October 11, 2015

ஆசியம்மா ... மனோரம்மா

ஆசியம்மா ... மனோரம்மா 
நெருங்கிய ஒருவர் இறந்து விட்டால் ...
நினைவலைகள் வெகு நேரம் ..
நெஞ்சில் அலை அலையாய் வந்து மோதும்...
மனோரமா... 
நம் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல , கூடவே வரும் சோக மேகம்...இன்று முழுவதும் என்னை மட்டும் அல்ல...என் போன்ற பலரையும் தொடரும்..
அந்த ஆச்சி மனோரமாவின் பல நினைவுகளில்... இதோ , ஒரு பழைய நினைவு...
பல காலம் முன்.... ஒரு காலை வேளையில்... மனோரமாவின் தாய் திடீர் என இறந்தபோது திகைத்துப் போய் நின்றாராம் ஆச்சி ...சோகத்தைப் பகிர்ந்து கொள்ள , சொந்தம் என்று எதுவும் இல்லை... அடுத்து என்ன செய்வது என எடுத்துச் சொல்ல , உறவும் எதுவும் இல்லை.. உதவவும் யாரும் இல்லையே என்று உள்ளம் வாடி நின்றாராம் மனோரமா....இதோ...அந்த அனுபவத்தை ஆச்சியே சொல்கிறார் :
“என் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். அவருக்கு சிகிச்சையளித்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவர் சிவாஜியின் குடும்ப டாக்டர். ஒரு நாள் காலையில் அம்மா இறந்து போக, அதை டாக்டரிடம் தெரிவித்தபோது அவர் வந்து பரிசோதித்து , அம்மாவின் மரணத்தை உறுதி செய்தார். பின் , நேராக சிவாஜி வீட்டுக்கு சென்றவர், அங்கு விபரம் கூறியிருக்கிறார்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில், சிவாஜி, கமலாம்மாள், பிரபு மூவரும் வந்து விட்டனர். அழுது கொண்டிருந்த என்னை ஆறுதல் படுத்திய சிவாஜி , "அம்மாவ எப்ப அடக்கம் பண்றதா இருக்கே... சொந்தக்காரங்களுக்கெல்லாம் தகவல் சொல்லிட்டியா?” என்றெல்லாம் விபரம் கேட்டவர்... “இங்க பாரும்மா… நீ எதுக்கும் கவலைப்படாதே. எப்போ எடுக்கிறதுனு மட்டும் சொல்லு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்..” னு சொல்லிட்டுப் போய் ஒரு வெண்பட்டுப் புடவையும், துளசி மாலையும் வாங்கிட்டு வந்தார் “அம்மாவுக்கு ஒரு மகனாக , நான் தான் காரியம் எல்லாம் பண்ணப் போகிறேன்!' என்று கூறிவிட்டுப் போனார்.
மறுநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் வந்து விட்டார் சிவாஜி. ...தலைப்பாகை கட்டிக்கிட்டு என் அம்மாவைக் குளிப்பாட்டி பட்டுப்புடவை போத்தி அம்மாவுக்கு ஒரு மகனா, எனக்கு அண்ணனா நின்னு எல்லா காரியங்களையும் செஞசார். அந்தவகையில் எங்க அம்மாவுக்கு அது நல்ல சாவு.
இறுதி காரியங்கள் எல்லாம் முடிந்த பின், எங்கள் வீட்டிற்கு வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு தயார் செய்து அனுப்பி வைத்தார். என் உடன் பிறந்த சகோதரன் கூட இப்படி செய்திருக்க மாட்டாரோ என்று நினைத்தேன். ஒரு மாபெரும் நடிகர், மகத்தான மனிதர் என் தாயாருக்கு செய்த மரியாதையைக் கண்ட போது, எனக்கு என் அம்மாவின் மீதே பொறாமை வந்தது. இந்த மரியாதை நமக்கு கிடைத்திருக்கக் கூடாதா என்று எண்ணினேன்.அவருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நினைத்துப் பார்க்கவே எனக்கு பெருமையாக உள்ளது..”
# ஆச்சிக்கு...பெருமை ஒரு பக்கம்... பொறாமை ஒரு பக்கம்... மாபெரும் கலைஞன் சிவாஜி செய்த மரியாதைகளை கண்டபோது , தன் தாய் மீதே பொறாமை வந்திருக்கிறது...
“இப்படிப்பட்ட இறுதி மரியாதை எனக்கும் வாய்க்காதா ..?” என்று ஆச்சி மனோரமாவின் அந்த பாவப்பட்ட இதயம் , பாசத்துக்காக ஏங்கி இருக்கிறது...
# அந்த உடன் பிறவா சகோதரன் சிவாஜி உயிரோடு இருந்திருந்தால் , இன்று மனோரமாவின் இறுதி ஆசை நிறைவேறி இருக்கும்...!
அவர்தான் ஏற்கனவே முதல் மரியாதையோடு எப்போதோ போய்ச் சேர்ந்து விட்டாரே...!
# எண்ணற்ற ஏக்கங்களும் , ஏராளமான ஏமாற்றங்களும் நிறைந்ததுதான் ஆச்சியின் வாழ்க்கை...!
# [ ப.பி. ] “சிலரின் வாழ்வில் அவர்கள் சந்தித்த மிகப்பெரிய ஏமாற்றங்கள்தான் ,
அவர்கள் மிகச் சிறந்தவர்களாக மாற , மிகப் பெரிய காரணமாகிறது.!”
# இதற்கு ஆச்சியை விட சிறந்த உதாரணம் யாரும் இருக்க முடியாது...!


John Durai Asir Chelliah

No comments:

Post a Comment