Thursday, October 22, 2015

“ your eyes are so peculiar..”


“ your eyes are so peculiar..”

நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த இங்கிலிஷ் படத்தின் ஹீரோ பேசிய இந்த வசனத்தால்தான் , எனக்கு அந்த பிரச்சினை வந்தது...

ஒரு இரவு நேரத்தில் சென்னை அபிராமி தியேட்டரில் , ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டிருந்தோம்....கல்லூரி காலத்தில்.... ஹாஸ்டல் நண்பர்களோடு...!
அப்போது ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது... [இப்போதும் அப்படித்தான்..! ]
.அந்தப் படத்தின் ஒரு இடத்தில் ஹீரோ , ஹீரோயினைப் பார்த்து இப்படிச் சொல்வான்...

“your eyes are so peculiar..”

அந்தக் காட்சியோடு “இன்டர்வெல்” ....

நண்பர்களோடு தியேட்டர் கேண்டீன் பக்கம் வந்தோம்...
அப்போதுதான் நண்பன் பாபு ‘திடீர்’ என என்னைப் பார்த்து , இப்படிக் கேட்டான்...
“ஜான்... பெகுலியர் என்றால் என்ன..?”

எதிர்பாராத இந்தக் கேள்வியால் நான் திணறிப் போனேன்...அவசரமாக பாத்ரூம் போவதாக சொல்லி விட்டு எஸ்கேப் ஆனேன்...!
பாபு எதற்கு என்னிடம் சந்தேகம் கேட்டான்...? அவனுக்கும் தெரியாதா..? அல்லது சோதித்துப் பார்க்கிறானா..? அது சரி.. Peculiar என்றால் என்ன..?

இடைவேளை முடிந்து மீண்டும் படம் போட்டு விட , எல்லோரும் அவரவர் இருக்கையை இருட்டில் தேடி அமர்ந்தோம்...எனக்கு ஏனோ இருப்புக் கொள்ளவில்லை..!

படம் முடிந்து இரவு ஒரு மணிக்கு ஹாஸ்டலுக்கு வந்து , ஓடோடிச் சென்று டிக் ஷனரியை தேடிப் புரட்டினேன்...

“ Peculiar – தனிப்பட்ட , விசித்திரமான ”

....... அன்றிலிருந்து இன்றுவரை peculiar என்ற வார்த்தையைப் படிக்கும்போதெல்லாம் , இந்த அபிராமி சம்பவம் நினைவுக்கு வரும்...

# இன்னொரு நாள் ,ஒரு பத்திரிகை அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தபோது ..
“சிவாஜி spontaneous actor .. அதை நிரூபிக்கிற மாதிரி ஏதாவது ஒரு காட்சி எழுதிக் கொடுங்க...” என்று ஒரு பத்திரிகை நண்பர் என்னிடம் கேட்டு விட்டு , உடனடியான பதிலை எதிர்பார்க்க ... Spontaneous என்றால் என்னவென்று தெரியாமல் நான் முழி முழி என்று முழிக்க...
அப்புறம் கேட்டுத் தெரிந்து கொண்டது...
spontaneous என்றால் ... “தன்னிச்சையான..சுயமான..” .!

# Water scarcity.... congested area... இப்படி நிறைய ஆங்கில வார்த்தைகளை , நெருக்கடியான நேரங்களில் கற்றுக் கொண்டதால்தான் இன்னும் நினைவில் நிற்கின்றன...!

# ஆம்... நெருக்கடியான நேரங்கள் ,
சில மனிதர்களை மட்டும் புரிய வைப்பதில்லை..!
பல வார்த்தைகளையும் , புரிய வைக்கிறது..!
மனதில் பதிய வைக்கிறது...!

..... வாழ்க்கையையும் கூட புரிய வைக்கிறது...!!



John Durai Asir Chelliah

No comments:

Post a Comment