Wednesday, October 14, 2015

“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே”....



“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே”....
பாசமலர் படத்திற்காக கண்ணதாசன் எழுதிய காவிய வரிகள்...
ஆனால் அந்த பாசமலர் சாவித்திரியின் கடைசிக் காலம் கண்ணீரில்தான் கரைந்து மறைந்தது..
அவரது இறுதி நாட்களில் அவரைச் சந்தித்த கமல் இப்படிச் சொல்லி இருந்தார்...
“ராஜபார்வை படத்தின் தொடக்க விழா அழைப்பிதழைக் கொடுக்க சாவித்திரி அம்மாவை தேடி போனேன்... அவர் இருந்த சந்தில் என் கார் போகாது. நிறுத்திவிட்டு விசாரித்து போனேன்... பத்துக்கு பத்து அறை. வாசலில் குத்துக் காலிட்டு உட்கார்ந்து இருந்தார்...அழகெல்லாம் வடிந்து போய், ஒல்லியாய், கருப்பாய்....
ஒரு காலத்தில் மிக கம்பீரமாய் காரை விட்டு இறங்கி எல்லோருக்கும் முதலில் சிரிப்பை பரிமாறும் அந்த நடிப்பு தேவதை என் கண்ணில் வந்து போனது...
என்னை கண்டதும் மெல்ல தயங்கி, கண்டுகொண்ட பின், “வா வா உள்ள..” என்று அழைத்து,
“ உன்னை உக்கார வக்க கூட இங்க வசதி இல்ல..”ன்னு சொன்னதும்,
“இங்கயா இருக்கீங்க..?” என்று கேட்டதும், சாவித்திரி அம்மா “எனக்கு என்ன குறை நல்லாத்தான் இருக்கேன்..” என சொல்ல...
கண்ணீரை மறைத்து கொண்டு “என் சொந்த பட பூஜை ..அதுதான் உங்கள கூப்பிட வந்தேன்..”....என்று சொல்லி விட்டு .. விம்மி புறப்பட்டு வர இருந்த அழுகையை அடக்கி கொண்டு கிளம்பினேன்" ..
# கமலுக்கு மட்டும் அல்ல...சாவித்திரியின் கடைசிக் காலம் பற்றி அறிந்தால்...எல்லோருக்குமே கண்ணீர் வரும்..!
சாவித்திரியின் பொன்னான வாழ்வு பொலிவு இழந்ததற்குக் காரணம் அவர் கால்களில் தங்கக் கொலுசைஅணிந்ததுதான் எனச் சிலரும் ...
தவறான வாஸ்துப்படி , தன் வீட்டில் தென் மூலையில் ஒரு நீச்சல் குளம் கட்டியதால்தான் சாவித்திரிக்கு வீழ்ச்சி ஏற்பட்டது என சிலரும் சொன்னதுண்டு...!
இந்தப் பாசமலரின் வாழ்வு , பாதியிலேயே கருகி உதிர்ந்ததற்கு காரணம் ..?
சாவித்திரி நடித்து , தயாரித்து, இயக்கிய “பிராப்தம்” படத்திற்காக ...
கண்ணதாசன் எழுதிய " தாலாட்டு பாடி தாயாக வேண்டும்” பாடலின் வரிகள் நினைவில் வருகின்றன....வழிகின்றன...கண்ணீரோடு !!!
“ஆறாது ஆறாது அழுதாலும் தீராது
ஆனாலும் வழி என்ன தாயே
அறியாத பெண்ணல்ல கனவோடு உறவாடு
சுமை தாங்கி கல்லாக நீயே
கடலலை ஏன் உறங்கவில்லை
கடவுளிடம் ஏனோ கருணை இல்லை.."

1 comment:

  1. John Durai Asir Chelliah

    பெயரோடு பதிவை மறு பதிவு செய்தால் மகிழ்ச்சி அடைவேன்...இல்லாவிட்டால் படிப்பவர்கள் என்னை தவறாக நினைக்கக் கூடும்....நன்றிங்க Ganesan Pondicherry

    ReplyDelete