Friday, October 23, 2015

“எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்...அது தருகிற தன்னம்பிக்கையை வேறு எதுவும் தராது .....!!”


“எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்...அது தருகிற தன்னம்பிக்கையை வேறு எதுவும் தராது .....!!”

இன்று இதைப் படித்தபோது எனக்கு ஏனோ நடிகர் ஜெய்சங்கரின் புன்னகை நினைவுக்கு வந்தது ...

சிவாஜி – எம்.ஜி.ஆர். என்ற இரு இமயங்கள் ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்த காலத்தில் , ஜெய்சங்கருக்கென்றும் தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது... அதற்கான தகுதி அவருக்கு இருந்தது...தன்னம்பிக்கையும் கூடவே இருந்தது...

நடைமுறை வாழ்க்கையிலேயே நாம் பார்த்திருக்கிறோமே....!
மௌன்ட் ரோட்டில்...”புஹாரி ஹோட்ட”லுக்கு கொஞ்சம் தள்ளி , சின்னதாய் தள்ளுவண்டி வைத்துக் கொண்டு ஒருவர் சிக்கன் பிரியாணி விற்றுக் கொண்டிருப்பார்.... அவரிடம் சாப்பிடவும் ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கும்.....
தி.நகரில் , போத்திஸ் , சரவணா ஸ்டோர்ஸ் பக்கத்திலேயே , தரையில் கடை பரப்பி சட்டைகளும் , சுடிதார்களும் விற்றுக் கொண்டிருப்பார்கள்...அவர்களிடம் பேரம் பேசி வாங்கவும் பெரும்பாலோர் வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள்..

அது போலவே திரை உலகத்திலும் , பிரகாசமான நட்சத்திரங்களுக்கு இடையில்.. தன்னம்பிக்கை உள்ளவர்கள் தனி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டுதான் இருந்தார்கள் ..இருக்கிறார்கள்...!
அப்படி அந்த நாட்களில் ஜொலித்த ஒரு நட்சத்திரம்தான் ஜெய்சங்கர்...

அந்த ஜெய்சங்கரின் ரசிகர்களில் ஒருவராக ஆனது பற்றி .. இதோ... எழுத்தாளர் பாலகுமாரன் வரிகளில்....

“ மிகமிக கற்பனையான எம்.ஜி.ஆர். படங்கள். "அடித்து நொறுக்கிவிடலாம். உடல் வலிமைதான் முக்கியம். நல்லவனாகவும் இருக்கவேண்டும். அடித்து நொறுக்குபவனாகவும் இருக்க வேண்டும்' என்று சொல்லித்தரப்பட்ட பாடம் அபத்தமாய் இருந்தது.
சண்டை எளிதே இல்லை. அது வலி மிகுந்தது. அவமானம் மிக்கது. தெருவில் சண்டையிட்டு அடித்து ஜெயித்தாலும், "தெருவில் அடித்த அயோக்கியன்' என்றுதான் வருமே தவிர, ஜெயித்தது வராது.
எம்.ஜி.ஆரை மட்டும் கொண்டாடுகிறார்களே, அது எப்படி? அது சினிமா. எம்.ஜி.ஆரைக் கொண்டாடுவார்கள். ஆனால் நீ சண்டையிட்டால் அசிங்கப்படுத்துவார்கள். பொறுக்கி என்பார்கள். இதை வெகு எளிதில் கற்றுக் கொண்டேன்.
அந்தக்கால படங்களில் சிவாஜி உதடு பிதுக்கி நிறைய அழுவார். அப்படி அழவும் அவமானமாக இருந்தது. அழும்போது பின்னால் வயலின்கள் ஒலிக்கவேண்டும். கிட்டார் அழ வேண்டும். புல்லாங்குழல் இசைக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த அழுகை மற்றவருக்குள் பெரிய துக்கமாகப் படரும். இந்த இசையில்லாத அழுகை ஒரு எழவும் செய்யாது. அதுவும் புரிந்தது. நான் சினிமாவிலிருந்து வெகுவேகமாக விலகினேன். சினிமா சொல்லித் தராது என்று நம்பினேன்.
இவர்கள் இரண்டு பேருக்கு பதில் ஜெய்சங்கர் படங்கள் அர்த்தமுள்ளதாய் எனக்குப் பட்டன. அவருடைய உயரமும் பேன்ட், உள்ளே சொருகப்பட்ட சட்டை, தலைமுடி, ஒரு குறுகிய நடை, கோணலாய் நிற்கின்ற போஸ். இதுதான் பல இளைஞர்களைக் கவர்ந்தது. ரவிச்சந்திரன் என்ற நடிகர் வேறுவிதமான தலை அலங்காரம், வேறுவிதமான மீசையோடு வர, அவர் பின்னாலும் கூட்டம் திரண்டது.”
இப்படி எழுதியிருக்கிறார் பாலகுமாரன் ...ஆம்..அதுதான் உண்மை...!

# தகுதி உள்ளவர்களைக் காட்டிலும் , தன்னம்பிக்கை உள்ளவர்களே எளிதில் வெற்றி பெறுகிறார்கள்..!

ஜெய்சங்கரின் நடை, உடை, புன்னகை எல்லாவற்றிலுமே தன்னம்பிக்கை தனித்துவமாக தெரியும்...!
அதுதான் அவர் பெற்ற வெற்றிக்கு மிகப் பெரும் காரணம்..!

No comments:

Post a Comment