Friday, October 23, 2015

"கும்பி எரியுது குடல் கருகுது ... குளு குளு ஊட்டி ஒரு கேடா?"


 "கும்பி எரியுது குடல் கருகுது ... குளு குளு ஊட்டி ஒரு கேடா?"

நெருப்பு பற்ற வைக்கும் வார்த்தைகளை தெரிந்தெடுத்து தன் பேச்சில் பயன்படுத்தும் வல்லமையும் , அறிவும் கருணாநிதி அளவுக்கு யாருக்கும் கை வந்தது இல்லை..!

# அது ஒரு கோடை காலம்... அப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது...!அப்போதைய சட்டசபை நிகழ்ச்சிகளை ஊட்டியில் நடத்தலாம் என்று காங்கிரஸ் கட்சி தீர்மானம் போட்டதாம்...
கொதித்து எழுந்தார் கருணாநிதி...

"கும்பி எரியுது குடல் கருகுது ... குளு குளு ஊட்டி ஒரு கேடா?" என்று பத்திரிகையில் கேள்வி எழுப்பினார்.
படித்தவர்கள் அத்தனை பேருக்கும் "குபீர்" என தீப்பற்றிக் கொண்டது..!
கருணாநிதியின் அறிவு , அத்தனை பேரையும் கவர்ந்தது... !
ஆதரவு அலை அவருக்கு அமோகமாக ஆனது..!

வசனம் எழுதுவதிலும் கருணாநிதியின் பேனா , வலிமை வாய்ந்தது....
பராசக்தியில் ஒவ்வொரு வசனமுமே “பஞ்ச்” வசனம்தான்...
“வந்தாரை வாழவைக்கும் தமிழகமே! நீ சொந்த நாட்டுக்காரனையே சுரண்டுவது எத்தனை நாளாய்?
வானத்தை முட்டும் மாளிகைகள் ! மானத்தை மறந்த மனிதர்கள்!
வீரப் பெண்களின் ஏடுகளை எழுதி எழுதி ஏற்றம் பெற்ற என்னருமைப் பொன்னாடே! நீ விபச்சாரிகளை வீதியில் திரியவிட்டு விழிகளை மூடிக்கொண்டது ஏன்?”

# பராசக்தி வசனத்தில் “பளிச்” என வெளிப்பட்ட கருணாநிதியின் அறிவு ,எல்லைகளைக் கடந்து எல்லோரையும் கவர்ந்தது...
எழுத்திலும் , பேச்சிலும் கருணாநிதியின் அறிவுக்கு ஈடாக , இதுவரை எவரையும் தமிழ்நாடு கண்டது இல்லை...
ஆனால்..இவரை எதிர்த்து நின்று போராடிய எம்.ஜி.ஆருக்கு எழுத்தறிவு ...பேச்சறிவு......இரண்டுமே சுமார்தான் ...!

# பார்த்தார் எம்.ஜி.ஆர்..! கருணாநிதிக்கு ஈடாக தன்னால் ஒருபோதும் பேசவோ , எழுதவோ இயலாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டார்...

அறிவு என்ற நெருப்பை ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு.... அன்பு என்ற ஐஸ் கட்டியை கையில் எடுத்தார் எம்.ஜி.ஆர்.... அப்புறமாக ஒரு பொதுக் கூட்டத்தில் , கூடியிருந்த மக்களைப் பார்த்து இப்படிச் சொன்னாராம் எம்.ஜி.ஆர்...!

“எனக்கு சொத்து எதுவும் வேண்டாம்.... நீங்க என்மேல இவ்வளவு பாசம் வைச்சிருக்கீங்க... உங்க ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒரு வேளை சாப்பிட்டால் கூட , என் ஆயுசு பூராவும் சாப்பிடலாம். நீங்கதான் எனக்கு எல்லாம்..”

# இவ்வளவுதான் எம்.ஜி.ஆர்.சொன்னது...!
அந்த அன்பு மழையில் , அத்தனை மக்களும் சொட்ட சொட்ட நனைந்து , சொக்கிப் போனார்கள்..!

# அறிவுக்கும் , அன்புக்கும் அடிப்படை வித்தியாசங்கள் உண்டு....

“அறிவு எதையும் யோசித்து செய்யும்....
அன்பு எதையும் யோசிக்காமல் செய்யும்..!!”

அதைப் புரிந்து கொண்டு , பொதுமக்களை தன் அன்பு வலைக்குள் , அகப்படச் செய்யும் வசியம் தெரிந்தவர் எம்.ஜி.ஆர். மட்டுமே..!

# மக்களை கொஞ்சம் கூட யோசிக்க விடாமல் , கடைசிவரை தன் சினிமாக்களை ரசிக்க வைத்தவர் ...எம்.ஜி.ஆர்...!
அது போலவே... அவர்களை கொஞ்சம் கூட யோசிக்க விடாமல் கடைசிவரை தனக்கு ஓட்டு போட வைத்தவரும் எம்.ஜி.ஆர்தான்..!

# அன்பு என்ற அந்த அற்புதமான ஆயுதத்தை நாமும் அனுதினமும் கையில் எடுத்து .. ஆயுத பூஜை நாளில் மட்டும் அல்ல...
அன்றாடம் பூஜிப்போம்...!
அன்பு ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!!


John Durai Asir Chelliah

தொகுப்பு-கணேசன் பாண்டிச்சேரி

No comments:

Post a Comment