Wednesday, October 14, 2015

“சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு , எந்த ஒரு விமர்சனத்தையும் சந்திக்கும் துணிவு வேண்டும்...!”

“சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ,
எந்த ஒரு விமர்சனத்தையும் சந்திக்கும் துணிவு வேண்டும்...!”
இயக்குனர் பாலச்சந்தர் இயக்கி பிரமிளா நடித்த “அரங்கேற்றம்” படம் வெளிவந்த சமயம் , தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பு அரங்கேறியது...!.
“அரங்கேற்றம்” கதையை சில பத்திரிகைகள் பாராட்டினாலும் , பல பத்திரிகைகள் கடுமையாகத் தாக்கின...!
படம் பார்த்த ரசிகர்களில் பலர் பாலசந்தரை பாராட்டினாலும் , சிலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்...
“அரங்கேற்றம்” கதாநாயகியை ஒரு பிராமணப் பெண்ணாக பாலசந்தர் காட்டியதால் , பிராமணர் சங்கங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தார்கள்...
சரி.. பாலசந்தர் எதற்காக அப்படி ஒரு “அரங்கேற்றம்” படத்தை எடுத்தார்..?
காரணம் இதுதான்...!
1972-ல் 'வெள்ளி விழா' படம் வாகினி ஸ்டூடியோவில் படமாகிக் கொண்டிருந்த சமயம்....
திடீரென்று இயக்குனர் பாலசந்தருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாம்.... அதனால் உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு காரில் புறப்பட்டாராம் பாலசந்தர்...
அதன்பின் நடந்தது என்ன..?
இதோ... பாலசந்தரே கூறுகிறார்:
“ஜெமினி அருகே கார் நின்றது. தனிமையில் இருந்த நான், என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தேன். அப்போது, 'கண்ணா நலமா' பேனர் கண்ணில் பட்டது. `இத்தனை ஆண்டுகள் கலைத்துறையில் இருந்து என்ன சாதித்து விட்டோம்' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இதற்குக் கிடைத்த பதில் `ஒன்றுமில்லை' என்பதுதான். `இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை. ஏதும் சாதிக்காமலேயே போய்விடுவோமா?' என்று எண்ணியபோது, கண்களில் நீர்த்துளிகள் மல்கின.
கார் நகரத் தொடங்கியது. என் சிந்தனைகளும் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. அப்போது, கதீட்ரல் ரோட்டில் என் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் இருந்த 'புன்னகை' பேனர்களைப் பார்த்தேன். சிறிது ஆறுதல். `ஏதும் செய்யாமல் இல்லை. ஏதோ நம்மால் முடிந்ததைச் செய்துதான் இருக்கிறோம்' என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். என் மனச்சுமை சிறிது இறங்கியது போல் இருந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய எனக்கு புதிய வேகமும், தெம்பும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டன. `எதையாவது புதுமையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் சினிமா துறையில் நான் நின்றாலும் சரி, வீழ்ந்தாலும் சரி' என்று முடிவு எடுத்தேன்.
'வெள்ளி விழா' படத்தை முடித்து திரையிட்டவுடன், அரங்கேற்றம் படத்தை எடுத்தேன்...”
# இதுதான் “அரங்கேற்றம்” உருவான கதை...!
இதுபற்றி பாலசந்தர் :
"இந்தப் படத்தைப் பொறுத்தவரை, வறுமையின் எல்லையை படம் பிடித்துக்காட்ட விரும்பினேன். அதற்கு வைதீக பிராமணக் குடும்பம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதை கருவாகக் கொண்டு, கற்பனையில் கதையை உருவாக்கினேன்..."
# சரி... இப்படி எதிர் விமரிசனங்கள் ஈட்டி போல பாய்ந்து வரும் எனத் தெரியாமலா பாலசந்தர் “அரங்கேற்றம்” படத்தை எடுத்திருப்பார்..?
“சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ,
எந்த ஒரு விமர்சனத்தையும் சந்திக்கும் துணிவு வேண்டும்...!”
அந்தத் துணிவு பாலசந்தரிடம் இருந்தது...
அதனால்தான் “அரங்கேற்றம்” பிறந்தது...!

1 comment:

  1. நன்றிங்க Ganesan Pondicherry... பெயரை குறிப்பிட்டு பதிவை பகிர்ந்ததற்கு பணிவான நன்றிகள்....

    ReplyDelete