Friday, October 23, 2015

“மச்சம்யா அந்த மனுஷனுக்கு...!”


“மச்சம்யா அந்த மனுஷனுக்கு...!”

எம்.ஜி.ஆர். பற்றி என் நண்பர்களோடு பேசும்போது “நச்”சென்று ஒரே வாக்கியத்தில் இப்படி கமெண்ட் அடிப்பார்கள்...
ஆம்..மற்றவர்கள் பொறாமைப்படும்படி வாழ்ந்த போற்றத்தக்க மனிதர் ..எம்.ஜி.ஆர்..!

சினிமாவில் இருந்தவரை சிகரம் தொட்ட சிம்மாசனம்...!
அரசியலில் நுழைந்தால் , அரசாளும் அரியாசனம் .!
இப்படி வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்...!

ஆம்... வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவரது வெற்றி முகம் மட்டும்தான் தெரியும்...ஆனால் அவருக்குள் இருந்த வேதனை மனம்....அதை யார் அறிவார்..?
தன் வாழ்க்கை பற்றி ஒரே வரியில் எம்.ஜி.ஆர். சொன்ன இந்த வாசகம் , நம் இதயத்தை உலுக்குகிறது...!

எம்.ஜி.ஆர். சொன்னது :
”என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை போராட்டமாகவே இருக்கிறது!”

இதை அவரது சாதாரண சங்கட காலங்களில் சொல்லி இருந்தால் பரவாயில்லை..
ஆனால் , புகழின் உச்சிக்குப் போனபின்... ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது இப்படிச் சொன்னாராம் எம்.ஜி.ஆர்...

உண்மைதானே..!
எம்.ஜி.ஆர். போல வாழ ஆசைப்படும் என் இனிய நண்பர்களிடம் நான் இப்படிக் கேட்பேன்..
“ஏழாவது வயதிலேயே வயிற்றுப்பிழைப்புக்காக நாடகக் கம்பெனியில் சேர்ந்து.... பசியிலும் பட்டினியிலும் சோர்ந்து ..ஒரு நடிகராக உருவெடுப்பதற்குள் அவர் சந்தித்த அவமானங்கள்...அதை நம்மில் எத்தனை பேர் பட்டிருப்போம்...அல்லது படத் தயாராக இருப்போம்..?”

எனது இந்தக் கேள்விக்கு பல நண்பர்களின் பதில் ...மௌனமே..!

அது மட்டுமா..?
1959 இல் நாடகத்தில் நடித்தபோது கால் முறிவு... 1967 இல் துப்பாக்கிசூடு...1972 இல் தான் வளர்த்த சொந்தக் கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்ட அவலம்...

அட... இது எல்லாவற்றையும் விடுங்கள்...ஒரு சாதாரண சராசரி மனிதனாக அவரது இதயத்து அடித்தள ஏக்கம்... அது ஈடில்லாத பெரும் துக்கம்...!

இதோ..அந்த சோகம் ..அவரது சொந்த வார்த்தைகளில் ...
“எனக்கு ரெண்டு, மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கலியே ! எந்த ஒரு புண்ணியவதியாவது என் வாரிசை அவ வயித்திலே பத்து மாசம் சுமந்து பெத்து என் கையிலே குழந்தையா கொடுக்க மாட்டாளா ? அப்படிங்கற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது...”

# நெஞ்சை நெகிழ வைக்கிறது அந்த நினைத்ததை முடிப்பவனின் நிறைவேறாத ஆசை...!

நான் நண்பர்களிடம் சொல்வேன்... “இவ்வளவு சோதனைகள் , ஏக்கங்கள் , அவமானங்கள் ..எல்லாவற்றையும் படத் தயாராக இருந்தால் ...எம்.ஜி.ஆர். ஆக ஆசைப்படலாம்.....எல்லோருமே...!!!”

# இதற்கு என் நண்பர்களின் பதில் ......ஏக்கப் பெருமூச்சு மட்டுமே...!!!

ஆம்... நாம் ஏக்கத்துடன் பார்க்கும் பல பெரிய மனிதர்களின் வாழ்க்கை .....
ஏக்கங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது..!

John Durai Asir Chelliah

No comments:

Post a Comment