Sunday, October 18, 2015

சுஜாதா பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று கண்ணில் பட்டது...

சுஜாதா பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று கண்ணில் பட்டது...
‘ப்ரியா’ ..
இந்தப் படம் 1978 இல் வெளியானது நன்றாக ஞாபகம் இருக்கிறது... ஆனால் திரும்ப திரும்ப திரையரங்குகளுக்குப் படை எடுத்த நாங்கள் , எத்தனை தடவை இந்தப் படத்தைப் பார்த்திருப்போம் என்பது எங்களுக்கே ஞாபகம் இல்லை...
எங்கள் எல்லோருக்கும் பிடித்த இந்த “ப்ரியா” ஒரே ஒருவருக்கு மட்டும் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை..
“ப்ரியா”வைப் பிடிக்காத அந்த ஒருவர்.... அந்தப் படத்தின் கதையை எழுதிய சுஜாதா..
இதோ..அது பற்றி சுஜாதா...
“.... ‘ப்ரியா’ சினிமாவானது ஒரு கூத்து...
பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். ஆனால் கதை இஷ்டத்திற்கு மாற்றப்பட்டது...
..இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது...”
# “பிரியா” கதை , சினிமாவுக்காக சித்திரவதை செய்து கொல்லப்பட்டதை , சுஜாதாவால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
சிறிது காலத்திற்குப் பின் சுஜாதா எழுதிய 'உன்னைக் கண்ட நேரமெல்லாம்' என்ற கதையில் , கணேஷும், வசந்த்தும் இப்படி உரையாடுவது போல எழுதி தன் குமுறலைக் கொட்டித் தீர்த்துக் கொண்டார் சுஜாதா ...
### “வசந்த் அதிகக் கோபத்தில் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தான்.
ஏராளமான காகிதங்களின் மத்தியில் 77 உறிஞ்சிக் கொண்டிருந்த கணேஷ் அவனை நிமிர்ந்து பார்த்து "எதுக்காக இப்படி வெட்டியா நடக்கிறே? என்ன ஆச்சு வசந்த்?"
"அந்த ஆள் மேல கேஸ் போடணும் பாஸ்."
"எந்த ஆள்? எந்த கேஸ்?"
"எழுத்தாளர் சுஜாதா! இந்த மாதிரி நம்ம ரெண்டு பேரையும் கேலிக்கிடமா படம் எடுக்க அனுமதிச்சதுக்கு."
"என்ன படம்?"
"ப்ரியா."
"எழுத்தாளர் என்ன செய்வார்? அவர் புஸ்தகத்திலே சரியாத்தானே எழுதியிருந்தார்?"
"படம் எடுத்தவர்கள் பேரில போடலாம்னு பார்க்கிறேன்."
"அவுங்க என்ன செய்வாங்க? புஸ்தகத்திலே இருந்த மாதிரி படம் எடுத்தா படம் போண்டி ஆயிடும்...... .......இதுக்கெல்லாம் கோவிச்சுண்டா என்ன ஆறது? விட்டுத் தள்ளு. படம் ஓடறது பாரு. கிளி, டால்பின்னு என்னமோ கலந்து கட்டி இருக்காங்களாமே?" கணேஷ் வாய்விட்டுச் சிரித்தான்.
"என்ன இருந்தாலும் எனக்கு சமாதானமாகலே பாஸ். நீங்க அந்தப் படத்தைப் பார்த்தீங்கன்னா..."
"முதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்க. ஒரு லாயர் கேஸ் போடவே கூடாது. கேஸ் போட வைக்கணும்."
# இப்படி எழுதித் தன் குமுறலைக் குறைத்துக் கொண்டிருக்கிறார் சுஜாதா.... கொந்தளிப்பு குறைந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்க ஆரம்பித்தார்...
சினிமாவின் சூத்திரங்களுக்கு ஏற்ப தன்னை “அப்டேட்” செய்து கொண்டார்...
அவரின் அசத்தல் வசனங்கள் அனைவரையும் கவரும் அளவுக்கு , சினிமாவை தன் வசப்படுத்திக் கொண்டார்...
# இதோ..சில சாம்பிள்கள்.....
# அந்நியனில் தன் உள்ளங்கையில் முத்தமிட்ட நந்தினியிடம் ரெமோ: “ஹேய் என்ன கைல முத்தம் குடுக்கிற .... நான் என்ன போப்பாண்டவரா..?”
#“தப்புல ஸ்மால், லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜெல்லாம் சொல்ல, அது என்ன பனியன் சைஸா?”
# சரி... சினிமாவை அடியோடு வெறுத்த சுஜாதா , காலப்போக்கில் அந்த சினிமாவுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு வெற்றியும் பெற்றது எப்படி..?
சுஜாதா ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது...
“வாழ்க்கையே படிப்படியான சமரசங்களால் ஆனது.”
# நிஜம்தானே...!!!
எவ்வளவு பெரிய உண்மையை , எவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டார் சுஜாதா..?!!
ஆம்...“வாழ்க்கையே படிப்படியான சமரசங்களால் ஆனது.”

No comments:

Post a Comment